எங்களை புறக்கணித்து நடந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும்

கோவை, ஜன. 8: கோவை அடுத்த காரமடை ஊராட்சி ஒன்றியம் வெள்ளியங்காடு ஊராட்சிக்குட்பட்ட அரக்கடவு மற்றும் மூனுக்குட்டை பகுதியில்  9, 10 வார்டில் நடந்த ஊராட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் மாவட்ட கலெக்டர் ராஜாமணியிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அம்மனுவில் மக்கள் கூறியிருப்பதாவது: கோவை காரமடை ஊராட்சி ஒன்றியம் வெள்ளியங்காடு ஊராட்சிக்குட்பட்ட அரக்கடவு மற்றும் மூனுக்குட்டை பகுதியில் 300க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளுக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படாமல் பல ஆண்டுகளாக உள்ளது. இதனால் ஊர் மக்கள், சிறியவர்கள், பெரியவர்கள், வயதானவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த சாலையை சீரமைத்து தராவிட்டால் வெள்ளியங்காடு ஊராட்சிக்குட்பட்ட 9, 10வது வார்டு பகுதிகளான அரக்கடவு மற்றும் மூனுக்குட்டை பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தோம். ஆனால் அதிகாரிகளின் மிரட்டலால் எங்கள் பகுதியில் உள்ள சிலர் வாக்களித்தனர். பெரும்பாலான ஊர் மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். எனவே 9வது மற்றும் 10வது வார்டுக்கு நடந்த ஊராட்சி மன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும். எங்களுக்கு சாலை வசதி அமைத்து தர  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: