‘பாஸ்ட் டேக்’ திட்டத்தில் நகரில் 3000 கார்டுகள் விநியோகம்

கோவை, டிச. 13: மத்திய அரசின் ‘பாஸ்ட் டேக்’ திட்டம் தொடர்பாக கோவையில் 3000 பாஸ்ட் டேக் கார்டுகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன என  தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளில் ஏராளமான சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றை கடந்து செல்வதற்கு வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதையடுத்து நாடுமுழுவதும் அனைத்து இடங்களிலும் தானியங்கி சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை (பாஸ்ட் டேக்) டிசம்பர் 15ம் தேதி அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தமுறையை பயன்படுத்துவோர் எந்த இடத்திலும், தங்களது வாகனத்தை நிறுத்தி கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இதற்காக சுங்கச்சாவடிகளில் பிரத்தியேகமாக ‘பாஸ்ட் டேக்’ என்ற வழி உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், செல்வதற்கு ‘பாஸ்ட் டேக்’ என்ற கார்டை பயன்படுத்த வேண்டும். இந்தகார்டானது கோவையில் தேசிய நெடுஞ்சாலை துறையினரால் நகரில் உள்ள தனியார் மால்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் ஆகியவற்றில் நவம்பர் மாதம் முதல் கவுன்டர்கள் அமைத்து வழங்கப்பட்டு வருகின்றன. இதை கார்டை பெறுவதற்கு வாகனத்தின் ஆர்சி புக், உரிமையாளரின் போட்டோ,  லைசென்ஸ், பான் கார்டு விவரங்கள் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். பாஸ்ட்  டேக் வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பாங்கிங்  உள்ளிட்ட ஆன்லைன் சேவைகள் மூலமாகவும் பணத்தை செலுத்தி ரீசார்ஜ் செய்து  கொள்ளலாம்.

இதுகுறித்து கோவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிடல் அதிகாரி கூறுகையில், ‘ கோவையில் நவம்பர் முதல் இந்த கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 3 ஆயிரம் பேர் பெற்றுள்ளனர். டிசம்பர் 15ம் தேதிக்கு பிறகு பாஸ்ட் டேக் முறை நடமுறைக்கு வந்த பிறகு இந்த கார்டு இல்லாமல் பயணம் மேற்கொண்டால் வாகன உரிமையாளர்கள் அபராத தொகை செலுத்த நேரிடும்,’’ என்றார்.

Related Stories: