வேலூர் வடக்கு காவல் நிலைய பகுதிகளில் 69 லட்சம் மதிப்பில் 300 அதிநவீன கேமராக்கள்

வேலூர், டிச.13: வேலூர் வடக்கு காவல் நிலைய பகுதிகளில் ₹69 லட்சத்தில் 300 அதிநவீன கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் சார்பில் 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் போலீசாருக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களின் புகைப்படம் கிடைத்துள்ளது. இந்நிலையில் ₹69 லட்சம் மதிப்பில் 300 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்த அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் கூறுகையில், ‘வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு சார்பில் ஒதுக்கப்படும் நிதியுடன், தனியார் பங்களிப்பு நிதியை பயன்படுத்தி மொத்தம் ₹69 லட்சம் மதிப்பில் 300 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இந்த கேமராக்கள் இரவு நேரத்திலும் தெளிவாக படம் பிடிக்கும் வகையில் பொருத்தப்பட உள்ளது. ஒவ்வொரு கேமராவுக்கும் தனித்தனி யுபிஎஸ் அமைக்கப்பட உள்ளது. இதனால், மின்சாரம் தடைப்பட்டாலும் 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கும். இதற்கான பணிகள் ஓரிரு மாதங்களில் முடிக்கப்படும்’ என்றார்.

Related Stories: