வேலூர் ஒன்றியம் தெள்ளூர் ஊராட்சியில் 3 மாத சம்பளம் வழங்காததால் துப்புரவு தொழிலாளர்கள், பம்ப் ஆபரேட்டர்கள் வேலைநிறுத்தம்

வேலூர், டிச.13: வேலூர் ஒன்றியம் தெள்ளூர் ஊராட்சியில் வீட்டுவரி வசூலிப்பில் லட்சக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கும் நிலையில், அந்த ஊராட்சியில் துப்புரவு தொழிலாளர்களும், பம்ப் ஆபரேட்டர்களும் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாத நிலையில், ஊராட்சிகளில் அரசின் பல்வேறு திட்டங்களில் நடந்து வரும் நிதி முறைகேடுகள் தொடர்பாக அடுத்தடுத்து புகார் எழுந்து வருகிறது. ஊராட்சிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க கணினிமயமாக்கப்பட்டும் நிதி முறைகேடு என்பது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் வேலூர் ஊராட்சி ஒன்றியம் தெள்ளூர் ஊராட்சியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் தற்போது வரை வீட்டுவரி, குழாய்வரி வசூலிக்கப்பட்டதற்கான ரசீது வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதன் மூலம் ₹35 முதல் ₹40 லட்சம் வரை பதிவேடுகளில் ஏற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கிராம மக்கள் தரப்பில் பிடிஓ, மண்டல துணை தாசில்தார், மண்டல துணை தாசில்தார் தணிக்கை என்று பல தரப்பிலும் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இங்கு ஊராட்சி செயலராக பணியாற்றியவர் ஏற்கனவே கருகம்பத்தூர் ஊராட்சியில் செயலராக பணியாற்றிய போதே நிதி முறைகேட்டில் ஈடுபட்டு சஸ்பெண்ட் ஆனவர் என்றும், அவரை ஆளுங்கட்சியின் அழுத்தம் காரணமாக தெள்ளூர் ஊராட்சிக்கு மாற்றினர் என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளாக வீட்டுவரி, குழாய் வரி வசூலிக்கப்பட்டதை கணக்கில் ஏற்றாமல் முறைகேட்டில் ஈடுபட்டு வந்தார். பிரச்னை பெரிதானதும் மீண்டும் அவரை கருகம்பத்தூருக்கே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்துள்ளனர். ஆனால் இதுவரை ஊராட்சி பதிவேடுகளை அவர் ஒப்படைக்கவில்லை. இவ்விஷயத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தொடங்கி உயர்அதிகார மட்டம் வரை ஊராட்சி செயலருக்கு சாதகமாகவே செயல்படுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறி, ஊராட்சியின் துப்புரவு பணியாளர்கள், பம்ப் ஆபரேட்டர்கள் என 8 பேர் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுவதுடன், பெரிய ஊராட்சியான தெள்ளூரில் குப்பைகள் தேங்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு ஊராட்சியில் நடந்த நிதிமுறைகேடுகள் தொடர்பாக நேர்மையான விசாரணை நடத்தி, கையாடல் செய்யப்பட்ட ஊராட்சி நிதியை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெள்ளூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஊராட்சிகள் உதவி இயக்குனர் செந்தில்வேலிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘நான் சமீபத்தில்தான் பொறுப்பேற்றுள்ளேன். தெள்ளூரில் என்ன பிரச்னை என்பது தெரியவில்லை, விசாரிக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

Related Stories: