தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் வனகாப்பாளர் பணிக்கு இலவச பயிற்சி வகுப்பு

தூத்துக்குடி, டிச. 12: தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் வனகாப்பாளர் பணிக்கான இலவச பயிற்சி வகுப்பு துவங்கியது.  தூத்துக்குடியில் இயங்கிவரும் கின்ஸ் அகாடமி கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழக அரசின் போட்டித் தேர்வுகளுக்காக மாணவ, மாணவிகளுக்கு முற்றிலும் இலவசமாக  பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறது. இதில் 2017ம்  ஆண்டு நடந்த சீருடை பணியாளர்கள் தேர்வில் 38 மாணவர்களும் டி.என்.பி.எஸ்.சி  குரூப் - 2 தேர்வில் 3 மாணவர்களும் வெற்றிபெற்று பணியிடம்  பெற்றனர்.  கடந்த 2018ம் ஆண்டு நடந்த சீருடை பணியாளர்கள் தேர்வில் 27  பேரும், டி.என்.பி.எஸ்.சி குரூப்- 4 தேர்வில் 32 மாணவர்களும் வெற்றிபெற்று  பணியிடம் பெற்றனர். இந்தாண்டில் நடந்த வனவர் தேர்வில் இருமாணவர்களும் வனகாப்பாளர் தேர்வில் 3 மாணவர்களும் வனக்காவலர் தேர்வில் ஒரு  மாணவரும் வெற்றிபெற்று பணியாற்றி வருகின்றனர். அத்துடன் இந்தாண்டு நடத்தப்பட்ட தமிழக அரசின் சீருடை பணியாளர் தேர்வில் 70க்கும் மேற்பட்ட மாணவர்களும், டி.என்.பி.எஸ்.சி குரூப்- 4 தேர்வில் 30க்கும்  மேற்பட்ட மாணவர்களும் மத்திய அரசு  தேர்வில் 40க்கும் மேற்பட்ட  மாணவர்களும், குரூப்- 2 தேர்வில் 4 மாணவர்களும் வெற்றிபெற்றனர். இந்நிலையில் அரசின் வனகாப்பாளர்  பணிக்கான இலவச பயிற்சி வகுப்பு தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில்  துவங்கியுள்ளது. துவக்க விழாவுக்கு கூட்டுறவு துறை சார்பதிவாளர் இளன்மாறன்  தலைமை வகித்தார். கின்ஸ் அகாடமி நிறுவனர் பேச்சிமுத்து வரவேற்றார். முதல்நிலை கூட்டுறவு தணிக்கையாளர்  நாகராஜன் குத்துவிளக்கேற்றி பயிற்சிவகுப்பைத் துவக்கிவைத்தார்.  இதில் கின்ஸ் அகாடமியில் படித்து வெற்றிபெற்று தற்போது வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வரும் மணிகண்டன்,  ரமேஷ்குமார் மற்றும் மீன்வளத்துறையில்  பணிபுரிந்து வரும் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தாண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 4 தேர்வில் வெற்றிபெற்ற சிவகுருநாதன் நன்றி கூறினார். இதில் மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: