மாமல்லபுரத்தில் சுழலும் கதவினால் சுற்றுலா வரும் மாற்றுத் திறனாளிகள் கடும் சிரமம்

மாமல்லபுரம், டிச.11: மாமல்லபுரத்தில் சுழலும் கதவினால் சுற்றுலா வரும் மாற்றுத் திறனாளிகள் சிரமம் அடைகின்றனர். இதற்கு, பேரூராட்சி நிர்வாகம், தொல்லியல் துறை நிர்வாகங்கள் வழிவகை செய்ய வேண்டும் என சுற்றுலா வழிகாட்டி சங்கம் வலியுறுத்தியுள்ளது.மாமல்லபுரத்தில் அர்ச்சுணன் தபசு எதிரே அமைக்கப்பட்ட சுழலும் கதவினால் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வரும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரம் வந்தனர். அதன் பிறகு, தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்துக்கு வந்து செல்கின்றனர். பல்லவ கால சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை கல், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்பட பல்வேறு புராதன சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில், மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. வெண்ணெய் உருண்டை கல்லை சுற்றி பார்க்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதேபோல், மேற்கு ராஜவீதியில் உள்ள அர்ச்சுனன் தபசு, பாடசாலை தெருவில் புராதன சின்னங்களின் பாதுகாப்பு கருதி பஸ், வேன், கார், பைக் ஆகியவை செல்ல தடை விதிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதற்கு, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து அர்ச்சுனன் தபசு மற்றும் கிருஷ்ணா மண்டபம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த சுழலும் கதவினை அகற்றி, பைக் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால், அர்ச்சுனன் தபசு எதிரே உள்ள பாடசாலை தெருவில் சுழலும் கதவு அகற்றவில்லை. இதையொட்டி, பைக் செல்வதற்கும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அந்த சுழலும் கதவு வழியாக சென்று புராதன சின்னங்களை பார்க்க முடியாமல் சிரமம் அடைகின்றனர். இந்த சம்பவம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பாடசாலை வழியாக வரும் சுற்றுலாப் பயணிகள் தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, அவ்வழியாக காலம் காலமாக வெண்ணெய் உருண்டை கல் மற்றும் அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணா மண்டபம் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்க்கின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன் அமைக்கப்பட்ட சுழலும் கதவினால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வரும் மாற்றுத் திறனாளிகள் சுழலும் கதவை தாண்டி சென்று புராதன சின்னங்களை பார்க்க முடியாமல் ஏமாற்றமடைகின்றனர்.  எனவே, மாற்றுத் திறனாளிகள் வரும் சக்கர நாற்காலி செல்லும் அளவில் சுழலும் கதவினை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழிகாட்டி சங்கம் வலியுறுத்துகிறது.

Related Stories: