டெங்கு காய்ச்சல் தடுக்க தீவிர நடவடிக்கை

கோவை, டிச. 9: கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தொடர் முயற்சியின் காரணமாக நடப்பாண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் கடந்த காலங்களை விட குறைந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழையின் காரணமாக மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறையினர் சிறப்பு குழுக்கள் அமைத்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறுகையில், “பருவநிலை மாற்றம் காரணமாக டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு பிளாக்கிற்கும் 3 பேர் கொண்ட சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தவிர, ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் 5 பேர் கொண்ட மருத்துவ குழுவின் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், நர்சிங் மாணவிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மாவட்ட அளவில் தற்போது பெரிய அளவில் டெங்கு பாதிப்பு இல்லை. விரைவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறையும்” என்றார்.

Related Stories: