அணைக்கட்டு தாலுகாவில் 80 கிராமங்களுக்கு 3 சர்வேயர்கள் மட்டுமே பணியில் உள்ளனர் காலி பணிடங்களை நிரப்ப பொதுமக்கள் கோரிக்கை

அணைக்கட்டு, டிச.9: அணைக்கட்டு தாலுகாவில் 80 கிராமங்களுக்கு 3 சர்வேயர்கள் மட்டுமே பணியில் உள்ள நிலையில், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் அணைக்கட்டு, ஊசூர், பள்ளிகொண்டா, ஒடுகத்தூர் உள்ளிட்ட 4 உள்வட்டங்கள் உள்ளன. புதியதாக பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் சேர இருந்த அகரம் உள்வட்டமும் சேர்க்கப்பட்டதால் தற்போது அணைக்கட்டு தாலுகாவில் 5 உள்வட்டங்கள் உள்ளன.இந்த உள்வட்டங்களில் மொத்தம் 80 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நிலம் அளவீடு செய்தல், பட்டா மற்றும், புது வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நிலம், வீடு சம்பந்தபட்ட பல்வேறு தேவைகளுக்கு அணைக்கட்டு தாலுகா அலுவலக சர்வேயர் பிரிவுக்கு சென்று விண்ணப்பிக்கின்றனர். அவ்வாறு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களுக்கு உரிய தீர்வு கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக அணைக்கட்டு தாலுகாவில் சர்வேயர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும், பணியில் உள்ள ஓரிருவர் அளவீட்டுப்பணிக்காக வெளியில் சென்று விட்டதாகவும் சர்வே பிரிவில் நிரந்தர பதிலாக கிடைப்பதாக புகார் தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.அணைக்கட்டு தாலுகாவில் தற்போது ஒரு தலைமை சர்வேயர் மற்றும் 3 சர்வேயர்கள் மட்டுமே உள்ளனர். இதில் ஊசூர் சர்வேயரே ஒடுகத்தூர் உள்வட்டத்தையும் கூடுதலாக சேர்த்து பார்ப்பதால் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே, அவர் ஒடுகத்தூர் செல்வதால் அந்த பகுதியில் நிலம் அளவீடு செய்யும் பணிகள் நிலுவையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

இருக்கின்ற 3 சர்வேயர்களும் குடிமராமத்து பணிகள் என்று ஏரிகளை அளவீடு செய்யும் பணிக்கு சென்றுவிடுவதால் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பித்து 2 மாதங்களுக்கு மேலாக இடம் அளவீடு செய்யாமல் நிலுவையில் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் துணை மின்நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்வது உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் கட்ட இடம் தேர்வு செய்யாமலும் நிலுவையில் உள்ளது. தற்போது கூடுதலாக அகரம் உள்வட்டம் சேர்க்கப்பட்டிருப்பதால் அங்கும் சர்வேயர் பணியிடம் காலியாக உள்ளது.எனவே, அணைக்கட்டு தாலுகாவில் காலியாக உள்ள சர்வேயர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மக்கள் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், மனுநீதி நாள் முகாம்களில் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் நிலம் அளவீடு செய்தல், பட்டா மாற்றத்திற்கு அளவீடு செய்தல் போன்ற பணிகள் அனைத்தும் நிலுவையில் உள்ளது. எனவே அணைக்கட்டு தாலுகாவில் காலியாக உள்ள சர்வேயர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அணைக்கட்டு தாலுகா பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>