மாவட்டத்தில் 3 குடோன்களுக்கு சீல் 349 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்

கோவை, நவ. 20:  கோவை உக்கடம் பகுதியில் உணவுத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 349.25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதற்காக சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள், பள்ளி, கல்லூரிகள் அருகேயுள்ள பெட்டி கடைகள், சில்லறை விற்பனை கடைகள், குடோன்களில் ஆய்வு நடத்தி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையில், நேற்று முன்தினம் உக்கடம் காய்கறி மார்க்கெட் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு குழுவினர் மொத்தம் 70 கடைகள், 2 குடோன்களில் ஆய்வு நடத்தினர். இதில், 11 கடைகள் மற்றும் இரண்டு குடோன்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து உணவுத்துறை அதிகாரிகள் அங்கிருந்த 349.25 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3.5 லட்சம். மேலும், உக்கடம் காய்கறி மார்க்கெட் அருகே புகையிைல பொருட்களை பதுக்கி வைத்து இருந்த இரண்டு குடோன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 12 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத 2 கடைகளுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மேலும், இரண்டு கடைகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என உணவுத்துைற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், கடைகள், குடோன்களில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தொடர்பான தகவல்கள் கிடைத்தால் பொதுமக்கள் 94440-42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மளிகை கடைக்காரர் கைது:கோவை பெரியகடைவீதி அடுத்த வைசியாள் வீதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் மகேஸ்வரன் (52). இவர் தனது கடையில் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் நேற்று மாலை பெரியகடைவீதி போலீசார் மளிகை கடை மற்றும் அவருடைய வீட்டில் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து ரூ.1.34 லட்சம் மதிப்பிலான 80 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து மகேஸ்வரனை கைது செய்தனர். பெரியகடைவீதி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: