காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படும். இதையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா நேற்று கோலாகலமாக  நடந்தது.செவிலிமேட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் ஆலயத்தில் சிவபெருமானுக்கு அன்னம் மற்றும் காய் கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ள சிறப்பு தீபாராதனை கள் நடந்தன.

இந்த அலங்காரத்தில் சிவனை தரிசனம் செய்வதால், ஆண்டு முழுவதும் உணவுக்கு குறை இருக்காது என்பது ஐதீகம். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.இதேபோல் கைலாசநாதர் கோயில்,  ஏகாம்பரநாதர் கோயில், கச்சபேஸ்வரர் கோயில், நகரீஸ்வரர் கோயில், அறம்வளத்தீஸ்வரர் கோயில், காஞ்சிபுரத்தில் காந்தி சாலையில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோயில், திருக்கச்சி நம்பி தெரு முத்தீஸ்வரர் கோயில், தவளேஸ்வரர் கோயில்  உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.அதேபோன்று காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள கூழமந்தல் கிராமத்தில் உள்ள வடக்கு கங்கை கொண்ட சோழிஸ்வரர் திருக்கோயிலில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் 100 கிலோ அரிசி சாதம் 100 இனிப்பு, 100 கிலோ பழங்கள்,  100 காய்கறி வகைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

Related Stories: