குண்டும் குழியுமாக காணப்படுகின்றன கதறவிடும் கலெக்டர் ஆபீஸ் சுற்றுச்சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

சிவகங்கை, நவ.5:  சிவகங்கை கலெக்டர் அலுவலக பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாய் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கை கடந்த 1985ம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. மாவட்டத்திற்கான கலெக்டர் அலுவலகம் திருப்பத்தூர் சாலையில் அமைக்கப்பட்டு கடந்த 1988ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், கல்வி, மின்வாரியம், வனம், கருவூலம், தொழில் மையம், வேளாண் மையம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளன. கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் அரசு குடியிருப்புகள் உள்ளன. மஜீத் ரோடு பகுதியில் இருந்து ஆர்டிஓ அலுவலகம் வழி கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை, புதூர் செல்லும் சாலை, சி, ஏ பிளாக் குடியிருப்புகள் செல்லும் சாலை உள்பட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் உள்ள பல்வேறு சாலைகள் குண்டும், குழியுமாய் உள்ளன.

தினமும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் பயணம் செல்லும் இந்த சாலைகள் கண்டுகொள்ளப்படாமல் உள்ளன. சாலையில் உள்ள பள்ளங்களில் அவ்வப்போது மண், கல்லை கொட்டிவிட்டு செல்கின்றனர். சில நாட்களில் இவைகள் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விடுகின்றன. எனவே சாலைகளை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.  பொதுமக்கள் கூறுகையில், இந்த சாலைகள் பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாய் காணப்படுகின்றன. ஆனால் சாலையை பராமரிக்கவோ, புதிய சாலை போடவோ எந்த நடவடிக்கையும் இல்லை. மழைக்காலத்தில் சாலையில் உள்ள பள்ளங்களில் நீர் தேங்கி நிற்கிறது. பிரதான சாலையான இச்சாலைகளின் வழியே உயர் அதிகாரிகள் ஏராளமானோர் சென்று வருகின்றனர். ஆனால் ஏனோ கண்டுகொள்ளவில்லை. இங்கு புதிய சாலைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: