தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்

கோவை, அக். 25: தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 30 சதவீதம் போனஸ் வழங்க ேவண்டும் என த.மா.கா வலியுறுத்தியுள்ளது.தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.) மாநில துணை தலைவரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான கோவை தங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை  மாவட்டம் வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள்,  தங்கள் உயிரை பணயம் வைத்து, தேயிலை தோட்டங்களில் தினக்கூலிக்காக  பணிபுரிந்து வருகின்றனர். ஆண்டு முழுவதும் யானை, புலி, சிறுத்தை, கரடி,  காட்டெருமை உள்ளிட்ட கொடிய வனவிலங்குகளின் தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர்.  தங்கள் உயிருக்கு ஆபத்து என தெரிந்தும், தங்களது குடும்பத்தை காப்பாற்ற,  வேறு வழியின்றி பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு, கடந்த  1997ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக பஞ்சப்படி 10 பைசாகூட  கொடுக்கவில்லை. ஆயிரக்கணக்கான தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அநீதி  இழைக்கப்படுகிறது. நான், எம்எல்ஏ.வாக இருந்தபோது பல போராட்டங்கள் நடத்தி,  சட்டமன்ற மானியகோரிக்கையின்போது சட்ட திருத்தம் கொண்டுவந்து 3 மாதத்திற்கு  ஒருமுறை பஞ்சப்படி கொடுத்தே ஆகவேண்டும் என உத்தரவு பெற்றுக்கொடுத்தேன்.  அதனால், இன்று தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.353 சம்பளம்  பெறுகிறார்கள். எனவே, தேயிலை தோட்ட தொழிலாளர்களின் கஷ்டத்தை  உணர்ந்து, டேன்டீ நிர்வாகமும், தனியார் தேயிலை தோட்ட முதலாளிகளும், இந்த  ஆண்டு 30 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கவேண்டும். இனி வரும் காலங்களிலும் இதே  அளவில் போனஸ் வழங்கவேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: