மதுராந்தகம் விவேகானந்தா பள்ளியில் ஆதரவற்ற சிறுவர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்

மதுராந்தகம், அக். 25: மதுராந்தகம் விவேகானந்தா பள்ளியில் ஆதரவற்றோர் சிறுவர்களுடன் தீபாவளி கொண்டாடப்பட்டது.மதுராந்தகம் நகரில் செயல்படும் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், நேற்று ஆதரவற்ற மாணவ, மாணவிகளுடன் தீபாவளி கொண்டாடப்பட்டது. இப்பள்ளியில், பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள்  மற்றும் தற்போது பயிலும் மாணவ, மாணவிகள் ஆகியோரின் பங்களிப்புடன் நடந்த இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் லோகராஜ் தலைமை தாங்கினார்.

மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆதரவற்றோர் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகள் 100க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், உணவு பொருட்கள் ஆகியவை பள்ளி வளாகத்தில் வழங்கப்பட்டன. மேலும், அவர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.ஆதரவற்ற மாணவ, மாணவிகள் பங்கேற்ற  பாட்டு போட்டி, பேச்சு போட்டி, நடனம் ஆகிய  கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களின் பயன்பாட்டுக்கு  அந்த விடுதிகளுக்கு மளிகை பொருட்களும் வழங்கப்பட்டன.

Related Stories: