தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

குன்றத்தூர், அக். 24: கடந்த சில மாதங்களாக மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பூட்டியுள்ள வீடுகளை உடைத்து, அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தது. இதுதொடர்பாக மாங்காடு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு தலைமையில் போலீசார் மாங்காடு - குன்றத்தூர் பிரதான சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஒரு வாலிபர், சந்தேகப்படும்படி நடந்து சென்றார். இதை பார்த்த போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால், சந்தேகமடைந்த போலீசார், அந்த வாலிபரை, காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

அதில் குன்றத்தூர், பாலாஜி நகர், அக்னீஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்த பிரபாகரன் (19). மாங்காடு பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, தொடர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, சுமார் 15 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

* பெரும்புதூர்: பெரும்புதூர் அருகே படப்பை, விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் தென்னரசு. இவரது மனைவி லதா (37). கிண்டியில் உள்ள ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு லதா, வேலை முடிந்து பஸ் மூலம் கீழ் படப்பை சென்றார். அங்கிருந்து டேவிட் நகர் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது பின்னால், பைக்கில் வந்த 2 பேர், அவரை வழிமறித்து லதாவின் கழுத்தில் இருந்த 5 சவரன் செயினை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த லதா, செயினை பிடித்துக் கொண்டு அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனால், உஷரான மர்மநபர்கள், கையில் கிடைத்த பாதி செயினை பறித்து கொண்டு தப்பினர்.

புகாரின்படி மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

*  உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த நங்கையர்குளத்தை சேர்ந்தவர் குமார் (47). கூலித் தொழிலாளி. நேற்று காலை குமார், உத்திரமேரூர் நூக்கலம்மன் கோயில் தெருவில் வசிக்கும் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க சென்றார்.

தென்னைமரத்தில் ஏரி தேங்காய்கள் பறித்துவிட்டு கீழே இறங்கும்போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

*  செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த பாலூர் அருகே தெல்லிமேடு கிராமத்தில், சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக பாலூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்த பகுதியில், கஞ்சா விற்று கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

அதில், அதே பகுதியை சேர்ந்த பர்வீன் (23) என தெரிந்தது. அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து, செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

* திருப்போரூர்: திருப்போரூர் படவட்டம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (40). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு சொந்தமான 2 பசு மாடுகள் நேற்று காலை மேய்ச்சலுக்கு சென்றன. மாலை 6 மணியளவில் மாடுகள் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மகாலிங்கம், விவசாய நிலங்களுக்கு சென்று தேடினார்.

அப்போது, திருப்போரூர் செக்கடித்தாங்கல் ஏரியின் பின்புறம் இருந்த விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து திருப்போரூர் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர், மின் இணைப்பை துண்டித்து மாடுகளை மீட்டனர்.  இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: