கட்டுமானப் பணியில் கத்தி விழுந்து தொழிலாளி பலி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம் கோவில்பட்டியில் பரபரப்பு

கோவில்பட்டி, அக். 23: கட்டுமானப்பணியின் போது  கற்களை அறுக்கும் இயந்திரத்தில் இருந்த கத்தி உடைந்து விழுந்து பலியான தொழிலாளியின் உடலை வாங்கமறுத்து கோவில்பட்டி மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். கோவில்பட்டி நடராஜபுரம் 9-வது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (50). கட்டிடத் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் புதுரோடு பகுதியில் நடைபெறும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணியில் ஜன்னல் வைப்பதற்காக கற்களை அறுக்கும் இயந்திரத்தை கொண்டு வெட்டினார். அப்போது அந்த இயந்திரத்தில் இருந்த கத்தி எதிர்பாராதவிதமாக உடைந்து, ஆறுமுகத்தின் கழுத்தில் விழுந்தது. இதில் அதிக அளவில் ரத்தம் வெளியேறியதோடு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலறிந்து  விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோதும், தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் பாஜ நகர பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், வக்கீல்  நீதிபாண்டியன் உள்ளிட்டோர் மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

Advertising
Advertising

தகவலறிந்து விரைந்து வந்த கிழக்கு இன்ஸ்பெக்டர் சுதேசன், எஸ்ஐ தர்மராஜ், துணை  தாசில்தார் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் சமரசப்படுத்தினர். இதையடுத்து கட்டிட உரிமையாளர் மற்றும் போராட்டக்குழுவினருடன் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உடன்பாடு ஏற்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டதோடு ஆறுமுகத்தின் உடலை பெற்றுச்சென்றனர். இருப்பினும் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Related Stories: