கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற ஆதார் அட்டையில் உள்ளதுபோல் இணையதளத்திலும் பெயர் இருக்க வேண்டும்

கோவை, அக்.10:பிரதம மந்திரியின் கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் மூன்றாம் தவணை உதவித்தொகையை பெற ஆதார் அட்டையில் உள்ளது போலவே இணையதளத்திலும் பெயரை பதிவேற்ற விவசாயிகள் வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.பிரதம மந்திரியின் கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 12 கோடி விவசாயிகள் ஆண்டுக்கு மூன்று தவணைகளாக நிதி உதவி பெற்று வருகின்றனர். பயிர்காலத்தில் மூன்று தவணைகளில் என ஒவ்வொரு தவணைக்கும் ரூ.2 ஆயிரம் என ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டில் 2 முறை விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதில் முறைகேடு ஏற்படுவதை தடுக்கும்  பொருட்டு, விவசாயிகளின் ஆதார் அட்டையில் பெயர் எப்படி இருக்கிறதோ, அதே போல் அரசின் இணையதளத்திலும் பெயரை பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான பொறுப்பு வேளாண்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: www.pmkisan.gov.in என்ற இணையதள பக்கத்தில் விவசாயிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆதார் அட்டையில் உள்ளது போலவே இந்த இணையதள பக்கத்திலும் விவசாயிகள் பெயர் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இணையதள பக்கத்தில் பெயர் மாற்ற வேண்டிய விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் ஆகிவற்றை எடுத்துக்கொண்டு தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்களையோ அல்லது வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கோ செல்லலாம். அங்கு உடனடியாக பெயர் சரிபார்த்தல் செய்யப்படும். இதன் மூலம் விவசாயிகள் உதவித்தொகையை தடையின்றி பெறலாம். மேலும், கடந்த தவணைகளில் பெயர், வங்கி கணக்கு எண் சரியாக இல்லாததால் உதவித்தொகை நிராகரிக்கப்பட்ட விவசாயிகளும், இந்த முறைப்படி தங்களது குறைபாடுகளை சரி செய்யலாம். இதனை விவசாயிகளே தன்னிச்சையாகவும் பதிவு செய்ய முடியும். இவ்வாறு வேளாண்  அதிகாரிகள் கூறினர்.

Related Stories: