திருவண்ணாமலை எடத்தனூர் மாந்தோப்பு ஏரியில் சவுடு மண் எடுக்க தடை கோரி வழக்கு: கலெக்டர் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, அக்.9: ஏரியில் விதிமுறைகளுக்கு முரணாக சவுடு மண் எடுப்பதற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் திருவண்ணாமலை கலெக்டர் பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்டம் எடத்தனூர் கிராமத்தை சேர்ந்த ஜி.கண்ணன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகாவில் உள்ள எடத்தனூர் கிராமத்தில் மாந்தோப்பு ஏரி என்ற ஏரி உள்ளது. இந்த ஏரி அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு நீராதாரமார உள்ளது. இந்த ஏரியில் தூர்வாறும் பணிக்கான அனுமதி எடத்தனூர் கிராமத்தில் ராமச்சந்திரா அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்தி வரும் ஏழுமலை என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக ஏரி, குளங்களை தூர்வாறும்போது அங்கிருந்து எடுக்கப்படும் சவுடு மண் சம்பந்தப்பட்ட ஏரி, குளங்களின் கரைகளை பலப்படுத்தவதற்கு பயன்படுத்தப்படும். ஆனால், மாந்தோப்பு ஏரியில் எடுக்கப்படும் சவுடு மண் வியாபார நோக்கத்தில் வெளியாட்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் மூலம் முழு ஏரியும் சவுடு மண் இல்லாத நிலைக்கு மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீராதாரமும் பாதிக்கப்படும். தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் சட்டத்திற்கு முரணாக இந்த ஏரியில் சவுடு மண் அள்ளப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட கலெக்டர், திருவண்ணாமலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உள்ளிட்டோருக்கு கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு திருவண்ணாமலை கலெக்டர், திருவண்ணாமலை பொதுப்பணித்துறை ெசயற்பொறியாளர், திருவண்ணாமலை ஆர்.டி.ஓ, தண்டராம்பட்டு தாசில்தார் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் சந்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதில் தருமாறு திருவண்ணாமலை கலெக்டர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டனர்.

Related Stories:

>