மூணாறு அருகே 200 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது 11 பேர் படுகாயம்

மூணாறு, செப்.30: மூணாறு அருகே 200 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து 11 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 5 பேர் ஆபத்தான நிலையில் தேனி, மதுரை மற்றும் எர்ணாகுளம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மூணாறில் நேற்று அதிகாலை போடி மெட்டு பகுதியில் இருந்து கோவிலூர் பகுதிக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை ஏற்றி ஜீப் சென்றது. இந்த வாகனத்தை மூணாறு சின்னக்கானல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (32 ஓட்டி சென்றார். ஓட்டுநர் உள்பட 12 பேர் வாகனத்தில் இருந்தனர். சின்னக்கானல் நீர்வீழ்ச்சி அருகே சென்ற வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து அப்பகுதியில் கடை நடத்தி வரும் அருண் மற்றும் அவரின் நண்பர்கள் உடனடியாக விபத்தில் சிக்கிய நபர்களை காப்பாற்றினர். சம்பவம் அறிந்த சாந்தன்பாறை போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மூணாறு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் படுகாயம் அடைந்த மூணாறு சேனாபதி பகுதியை சேர்ந்த மணிகண்டன், அமராவதி, ஜெயந்தி, செல்வராஜ் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தேனி, மதுரை, எர்ணாகுளம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். போடி பகுதியில் விபத்து ஏற்பட்டு 4 பேர் இறந்த நிலையில் மூணாறில் இருந்து மற்றும் போடி பகுதிகளில் இருந்து தொழிலாளர்களை ஏற்றி வரும் வாகனங்களை முறையாக பரிசோதிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: