செங்கல்பட்டு - திருப்போரூர் இடையே சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றப்படும் 100 ஆண்டு பனை மரங்கள்

திருப்போரூர், செப்.20: செங்கல்பட்டு - திருப்போரூர் சாலை விரிவாக்க பணிக்காக, 100 ஆண்டுகள் பழமையான நூற்றாண்டு  பனை மரங்கள் அகற்றப்படுகின்றன. இந்த பனை மரங்களை அகற்றாமல் சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு வரை 27 கிமீ தூரம் இருவழிப் பாதையாக உள்ளது. வடமாவட்டங்களில் இருந்து தாம்பரம் வழியாக சென்னைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால், செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு செல்ல திருப்போரூர் வழியாக மாற்று வழி உருவாக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது, இரு வழிப்பாதையாக உள்ள திருப்போரூர் - செங்கல்பட்டு சாலை நான்கு வழிப்பாதையாக மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது.

இதற்காக ₹13 கோடி செலவில் திட்டம் தீட்டப்பட்டு பணிகள் நடக்கின்றன. இந்த சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் இருக்கும் 400 மரங்கள் வெட்டப்படுகின்றன. சாலை பணிக்காக தோண்டப்படும் மரங்களை மறு நடவு செய்யும் திட்டம் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தவில்லை. இதையொட்டி, செங்கல்பட்டு - திருப்போரூர் இடையே விரிவு படுத்தப்படும் சாலைப் பணிக்காக சாலையின் இருபுறமும் உள்ள மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. குறிப்பாக திருவடிசூலம், சென்னேரி, கரும்பாக்கம், கொட்டமேடு, செம்பாக்கம் ஆகிய இடங்களில் 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி ரெட்டிக்குப்பம், முள்ளிப்பாக்கம், கரும்பாக்கம், அந்திரேயாபுரம் ஆகிய கிராமங்களில் சாலையின் இரு புறங்களிலும் வரிசையாக பனை மரங்கள் ஓங்கி வளர்ந்துள்ளன.

இந்த பனை மரங்கள், 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதால் கனமழை பெய்த போதும் சாலையோரத்தில் அரிப்பு ஏற்படாமல் இவை அரணாக பாதுகாத்து வந்தன. இப்போது, சாலை விரிவாக்கப் பணிகளுக்காக இந்த பனை மரங்களை வெட்டி வீழ்த்த நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. சாலை விரிவாக்கப் பணிகளுக்காக இந்த பனை மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதால் அப்பகுதி கிராம மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். எங்கள் ஊரின் அடையாளமாக இவை இருந்தன. இனி அடுத்த தலைமுறைக்கு இந்த பனை மரங்கள் வரிசையாக இருப்பதை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது என அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர், இந்த பனை மரங்களை அகற்றாமல் மாற்று வழியில் சாலையை அகலப்படுத்த யோசிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

பல திரைப்படங்களில் காட்சியான இடம்

கரும்பாக்கம் கிராமத்தில் சாலையின் இருபுறமும் உள்ள பனை மர வரிசை திரைப்பட துறையினரையும் விட்டு வைக்கவில்லை. 30 ஆண்டுகளுக்கு முன்பே பிரபல நட்சித்திரங்கள் நடித்துள்ள திரைப்பட படப்பிடிப்புகள், சண்டைக்காட்சிகள், பயணக் காட்சிகள், பாடல் காட்சிகள் இந்த சாலையில், பனை மரங்களின் நடுவே எடுக்கப்பட்டுள்ளது. பல படங்களில் இடம் பெற்றுள்ள இந்த பனஞ்சாலை இனி இருக்காது என்பதால், பலரும் தங்களின் செல்போனில் படம் பிடித்து செல்கின்றனர். சிலர் பின்னணியில் பனை மர வரிசை இருப்பது போன்று செல்பி எடுத்து கொள்கின்றனர்.

Related Stories: