சிவகங்கை, செப். 19: சிவகங்கை மாவட்டத்தில் போதிய பராமரிப்பு இல்லாததால் ஆறுகள் அனைத்தும் இருந்த தடமே இல்லாமல் அழியும் நிலையில் உள்ளன.மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கண்மாய்கள் 968, ஒன்றிய கண்மாய்கள் 4ஆயிரத்து 871 உள்ளன. இவைகள் தவிர மணிமுத்தாறு, பாலாறு, சருகணியாறு, நட்டாறு கால்வாய், வைகையாறு, உப்பாறு, பாம்பாறு, தேனாறு, விருசுழியாறு ஆகிய ஆறுகள் உள்ளன. பெயரளவில் சுமார் ஒன்பது ஆறுகள் இருந்தாலும் இவைகள் அனைத்தும் தற்போது தேடப்படும் நிலையிலேயே உள்ளன.இதில் வைகையாறு மட்டுமே சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்படும் போது, சிவகங்கை மாவட்டம் வழியாக ராமநாதபுரம் மாவட்டம் வரை நீர் செல்கிறது. மற்ற ஆறுகள் அனைத்தும் முற்றிலும் அழியும் நிலையிலேயே உள்ளன. இந்த ஆறுகள் மூலமே விவசாய கண்மாய்களுக்கான நீர் ஆதாரம் முழுமையாக கிடைத்துள்ளது. இந்த ஒன்பது ஆறுகளில் பெரும்பாலானவை கண்மாய்களில் தொடங்கி ஓர் ஆற்றுடன் மற்றொன்று சேரும் வகையில் உள்ளன.
கண்மாய்கள் நிறைந்தாலும் ஆற்றின் மூலம் பிற கண்மாய்களுக்கு நீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. சில ஆறுகள் மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தொடங்குகின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்பே தடுப்பணைகள், சிறிய அணைகள், பாலங்கள், தரைப்பாலங்கள், மடைகள், கலுங்குகள் என நீர் முற்றிலும் வீணாவதை தடுக்கும் வகையில் ஆறுகளுக்கும், கண்மாய்களுக்கும் இடையே பல்வேறு கட்டுமானப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.