ஆலத்தூர் தாலுகா பகுதியில் சின்ன வெங்காயம் நடவு பணியில் விவசாய தொழிலாளர்கள் மும்முரம்

பாடாலூர், செப். 17: ஆலத்தூர் தாலுகா பகுதி கிராமங்களில் விவசாயிகள் தற்போது தங்கள் நிலங்களில் சின்ன வெங்காய நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் சின்ன வெங்காய சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தை வகிக்கிறது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள பாடாலூர், இரூர், செட்டிகுளம், குரூர், சிறுவயலூர், நக்கசேலம், மங்கூன், பெரம்பலூர் தாலுகாவில் உள்ள பொம்மனப்பாடி, சத்திரமனை, அம்மாபாளையம், லாடபுரம், எசனை, அனுக்கூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சின்ன வெங்காய சாகுபடி செய்யப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 8 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 65 ஆயிரம் மெட்ரிக் டன் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.

சித்திரை, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி, மாசி ஆகிய மாதங்களில் சின்ன வெங்காய நடவு பணி மேற்கொள்ளப்படும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆலத்தூர் தாலுகா பகுதிகளில் உள்ள நாட்டார்மங்கலம், பாடாலூர், செட்டிகுளம், இரூர், காரை, தெரணி, நாரணமங்கலம், குரூர், சிறுவயலூர், டி.களத்தூர், அடைக்கம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் அந்த மழை ஈரத்தை பயன்படுத்தி விவசாயிகள் சின்ன வெங்காய நடவு பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பே விவசாயிகள் தங்களது நிலத்தை உழுது அடி உரமிட்டு சின்ன வெங்காயம் நடுவதற்காக கரை அமைத்து மழைக்காக காத்திருந்தனர். தற்போது மழை பெய்ததால் சின்ன வெங்காயம் நடவு பணியை துவக்கியுள்ளனர்.

Related Stories: