வாடகை செலுத்தாததால் கோட்டை ஈஸ்வரன் கோயில் கடைகள் கையகப்படுத்தப்பட்டது

ஈரோடு, ஆக. 20:  ரூ.27 லட்சம் வாடகை செலுத்தாததால் ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான கடைகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கையகப்படுத்தினர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் (ஈஸ்வரன்) கோயிலுக்கு சொந்தமாக மேற்கு அனுமந்தராயன் கோயில் வீதியில் அப்பர்சாமி மடம் உள்ளது. இந்த மடத்திற்கு சொந்தமான 10 கடைகளை பல ஆண்டுக்கு முன்பு சொற்ப வாடகையில் ஜவுளி பிரஸ் பேல் குடோன் நடத்தும் ஜவுளி வர்த்தகர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வாடகைக்கு விடப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இடத்தின் மதிப்பிற்கு ஏற்ப வாடகை தொகையை கணிசமாக உயர்த்தினர். உயர்த்தப்பட்ட வாடகை தொகையை ஏற்றுக்கொள்ளாத வாடகைதாரர்கள் கடந்த 2001ம் ஆண்டு முதல் தற்போது வரை நிர்வாகத்திற்கு வாடகை பாக்கியாக ரூ.27 லட்சம் நிலுவை வைத்தனர். இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் கோவையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இணை ஆணையர், வாடகை செலுத்தாமல் ஏமாற்றி வருபவர்களை வெளியேற்றி கடைகளை கையகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நந்தகுமார் தலைமையில், வருவாய்த்துறை அதகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் அப்பர்சாமி மடத்தில் இருந்த வாடகைதாரர்கள் போட்டிருந்த பூட்டை உடைத்து அகற்றி கடையை கையகப்படுத்தினர்.

மேலும், கோயில் நிர்வாகம் சார்பில் புதிய பூட்டும் போடப்பட்டது. இதில், கோயில் செயல் அலுவலர்கள் கங்காதரன், சீனிவாசன், முத்துசாமி, அருள்குமார், ரமணிகாந்தன், தாசில்தார் (கோயில் நிலங்கள்) பழனிச்சாமி, விஏஓ (கோயில் நிலங்கள்) அழகுராஜா, வருவாய் ஆய்வாளர் ரகுபிரசாத் உள்ளிட்ட உடன் இருந்தனர். இது குறித்து உதவி ஆணையர் நந்தகுமார் கூறுகையில்,`ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான அப்பர்சாமி மடத்தின் இடம் பல கோடி ரூபாய் மதிப்புடையது. அந்த இடத்தில் ஜவுளி வர்த்தம் நடத்தியவர்கள், நிர்வாகம் நிர்ணயம் செய்த வாடகையை செலுத்தவில்லை. இதையடுத்து தீர்ப்பாயம் உத்தரவுப்படி கடைகள் கையகப்படுத்தப்பட்டது’ என்றார்.

Related Stories: