ஈரோடு, ஜூன் 15: ஈரோடு மாட்டுச்சந்தையில் ஒரு மாட்டிற்கு கட்டணம் என்ற பெயரில் இருமுறை வசூலித்து வரும் மாநகராட்சி நிர்வாகத்தின் அடாவடித்தனத்தால் விவசாயிகள், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி அருகே, மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் மாட்டுச்சந்தை உள்ளது. வாரந்தோறும் வியாழக்கிழமை கூடும் இம்மாட்டு சந்தை தனியார் இடத்தில் உள்ளது. மேலும், டெண்டர் விடப்பட்டு, தனியார் மூலம் மாட்டுச்சந்தை நிர்வாகிக்கப்பட்டு வரப்படுகிறது.
இந்த சந்தைக்கு ஈரோடு சுற்றுப்புற பகுதி மட்டுமின்றி நாமக்கல், கரூர், திருப்பூர், சேலம் போன்ற வெளி மாவட்டங்களை சேர்ந்த கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். வாரம்தோறும் 600 முதல் 700 மாடுகள் வரத்து ஆகும். பசுமாடுகள் ரூ.30 ஆயிரம் வரையும், எருமை மாடுகள் ரூ.45 ஆயிரம் வரையும், வளர்ப்பு கன்றுகள் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனை ஆகும். அதேபோன்று, இச்சந்தையில் வரத்தாகும் மாடுகளை கோவை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களிலில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா போன்ற மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்வர்.
இந்நிலையில், மாட்டுச்சந்தைக்கு வரும் மாடுகளுக்கு தலா இரு முறை கட்டணம், மாநகராட்சி நிர்வாகத்தால் வசூலிக்கப்பட்டு வருகிறது. மாட்டிற்கு ஒருமுறை மட்டுமே வசூலிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அதனை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் மாநகராட்சி நிர்வாகம் அடாவடியாக வசூலித்து வருவது, விவசாயிகள், வியாபாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள், வியாபாரிகள் கூறியதாவது: மாநகராட்சி நிர்வாகத்திடம் டெண்டர் எடுத்தவர்களால் தலா ரூ.70 வசூலிக்கப்படுகிறது. அதேபோன்று, மாடுகளை வாங்கிச் செல்பவர்களிடம் இருந்து ரூ.50 வசூலிக்கப்படுகிறது. அதாவது, ஒரே மாட்டிற்கு இரட்டை வரி வசூலிக்கப்படுகிறது.
இங்கு போதுமான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால், அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், மாடுகளுக்கான அடிப்படை வசதிகளும் இல்லை. ஆனால், கட்டணம் மட்டும் தவறாமல் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. டெண்டர் எடுத்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களின் வசூல் வேட்டைக்கு மாநகராட்சி நிர்வாகமும் துணைபோவது கவலை அளிக்கிறது. எனவே, மாட்டுச்சந்தையில் கட்டணம் என்ற பெயரில் இருமுறை வசூலிப்பதை கைவிட்டு, மாடுகளை உள்ளே கொண்டு வரும் போது மட்டும் வசூலிக்க வேண்டும்.
வெளியே கொண்டு செல்லும் கட்டணம் வசூலிக்க கூடாது. விவசாயிகள், வியாபாரிகளுக்கான போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாடுகளுக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, மாட்டுச்சந்தையை தனியார் இடத்தில் நடத்துவதை கைவிட்டு, அரசுக்கு சொந்தமான இடத்தில் நிரந்தரமாக நடத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
