மொடக்குறிச்சி, ஜூன் 11: மொடக்குறிச்சி யூனியன் ஆபீஸ் எதிரில் புதிதாக போடப்பட்ட ரோடு பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.சங்ககிரி முதல் வெள்ளகோவில் வரை நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக ரோடு போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சின்னியம்பாளையத்தில் இருந்து ஈரோடு மாவட்ட எல்லையான முத்தூர் நொய்யல் ஆற்றுப்பாலம் வரை ரோடு போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போடப்பட்ட ரோடு அடிக்கடி பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தொடர்ந்து பல முறை அந்த பகுதியில் சாலைகள் பெயர்ந்து வருவது தொடர் கதையாகி உள்ளது. இந்த வழியாக மொடக்குறிச்சி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் என பலர் செல்லும்போது பகல் நேரங்களிலேயே குண்டும் குழியுமாக இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். மேலும், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள ரோட்டை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
