சத்தியமங்கலம், ஜூன் 11: புஞ்சை புளியம்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், காவிலிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பொங்கியானூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு வேமாண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக இந்த கிராமத்திற்கு சரிவர குடிநீர் விநியோகிக்கவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் காவிலிபாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குடிநீர் இன்றி அவதிப்பட்டு வந்த மக்கள் நேற்று காலை புஞ்சைபுளியம்பட்டி-சத்தியமங்கலம் சாலையில் பொங்கியானூர் பிரிவு அருகே காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் மற்றும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
