கோபி, ஜூன் 15: கோபி அருகே மொடச்சூரில் பட்டப்பகலில் பர்னிச்சர் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ளது மொடச்சூர்.இங்குள்ள கிங் அவென்யூவை சேர்ந்தவர் மூர்த்தி (53). பர்னிச்சர் கடை உரிமையாளர். இவரது மனைவி லதா (50). மகள் ஹாசனி (18). நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஈரோட்டில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மாலை வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். 2 படுக்கை அறையில் இருந்த 4 பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தது. அதனை சோதனை செய்தபோது 12 பவுன் நகை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் கோபி டி.எஸ்.பி. சீனிவாசன் மற்று போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மெயின்ரோடு வரை சென்றது.
ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். நேற்று முன் தினம் தினசரி மார்க்கெட் பகுதியில் அடுத்தடுத்து 7 கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் நேற்று வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 12 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கோபியில் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
