சென்னிமலை அருகே பட்டப்பகலில் வீட்டுக்கு முன்பு மதுபோதையில் மயங்கிய வாலிபர்கள் அட்ராசிட்டி

 

சென்னிமலை, ஜூன் 16: சென்னிமலை அருகே மது அருந்திவிட்டு பட்டப்பகலில் வீட்டுக்கு முன்பு படுத்திருந்த வட மாநில வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னிமலை அருகே முகாசிபிடாரியூர் நால்ரோட்டில் இருந்து அம்மன் கோயில் செல்லும் வழியில் இருபுறமும் வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் நேற்று மாலை 3 மணியளவில் கேட்டை திறந்து கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது கேட்டுக்கு முன்பாக மது போதையில் தள்ளாடியபடி 2 வாலிபர்களும் அதன் அருகிலேயே மரத்தடியில் மற்றொரு வாலிபரும் படுத்திருந்ததை பார்த்து அந்த பெண் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார்.

ஆனால், போதையில் படுத்திருந்த வாலிபர்கள் அந்த பெண்ணை தகாத வார்த்தையால் பேசி உள்ளனர். இதனால், பயந்து போன அந்த பெண் அருகில் உள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அங்கு வந்து போதையில் படுத்திருந்த வாலிபர்களிடம் எதற்காக இங்கு படுத்து இருக்கிறீர்கள்? என கேட்டபோது இந்தியில் பேசியுள்ளனர். பின்னர், இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வாலிபர்களை பிடித்து விசாரித்த போது, இவர்கள் 3 பேரும் வட மாநில தொழிலாளர்கள் என்றும், மது போதை அதிகம் ஆனதால் நிதானம் இல்லாமல் வீட்டுக்கு முன்பு படுத்திருந்ததாக தெரிவித்தனர்.

பின்னர், இவர்கள் 3 பேரையும் போலீசார் எச்சரித்து அங்கிருந்து துரத்தி விட்டனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,“பட்டப்பகலில் குடிபோதையில் இப்படி வீட்டு வாசலில் படுத்திருப்பதை பார்த்தால் பெண்கள் தனியாக வீட்டில் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், இது போன்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

 

Related Stories: