சிவத்தையாபுரம் முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா

ஏரல், ஆக.14: சிவத்தையாபுரம் முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். சாயர்புரம் அருகேயுள்ள சிவத்தையாபுரம் முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா கடந்த 7ம் தேதி புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தது. கொடை விழாவை முன்னிட்டு தினசரி இரவு சொற்பொழிவு நிகழ்ச்சியும், அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. கொடை விழா நேற்று நடந்தது. இதில் காலையில் ஆனந்த விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து முத்துமாலை அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு ஆனந்த விநாயகருக்கு மாலை சாற்றி சிறப்பு பூஜை, மன் நாராயண சுவாமிக்கு மாலை சாற்றி சிறப்பு பூஜை நடந்தது.

Advertising
Advertising

தொடர்ந்து முளைப்பாரி பெண்கள் அழைத்து வருதல், நையாண்டி மேளத்துடன் கரக ஆட்டம், இரவு 10 மணிக்கு முத்துமாலை அம்மன் கோயிலுக்கு மாவிளக்கு, ஆயிரங்கண் பானை, விரதம் இருந்து வரும் பக்தர்களை அழைத்து வருதல் நடந்தது. இரவு 12 மணிக்கு முத்துமாலை அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.  

இன்று (புதன்) அதிகாலை 1 மணிக்கு முத்துமாலை அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி ஊர் பவனி வரும் நிகழ்ச்சியும் தொடர்ந்து  வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது. கோயில் கொடை விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிவத்தையாபுரம் இந்து நாடார் உறவின்முறை தர்மகர்த்தா அச்சுதன் நாடார் செய்து இருந்தார்.

Related Stories: