திருப்பத்தூர் அருகே குரும்பேரி கிராமத்தில் 2 குடம் குடிநீருக்காக நள்ளிரவிலும் காத்திருக்கும் அவலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பத்தூர், ஆக. 11: திருப்பத்தூர் அருகே குரும்பேரி கிராமத்தில் விநியோகிக்கப்படும் 2 குடம் குடிநீருக்காக தினமும் நள்ளிரவிலும் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்தில் குரும்பேரி ஊராட்சி உள்ளது. இந்த கிராமத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நாள்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

Advertising
Advertising

இந்நிலையில், தற்போது இப்பகுதி முழுவதும் கடும் வறட்சியால் ஆழ்துளை கிணறுகள் வறண்டு ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் கிழக்குவீதி பகுதியில் 5 தெருக்கள் உள்ளன. ஒவ்வொரு தெருவிலும் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சுமார் அரை மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு 2, 3 குடங்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. இந்த இரண்டு குடம் குடிநீருக்காக கால் கடுக்க, தூக்கத்தை இழந்து தினமும் நள்ளிரவு முதல் காத்திருந்து தண்ணீர் எடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, முறையான குடிநீர் வினியோகம் செய்ய கந்திலி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: