அத்திவரதரை மீண்டும் நீருக்கடியில் வைக்கக்கூடாது ஜீயர் கருத்துக்கு வைணவ பக்தர்கள் கடும் எதிர்ப்பு

கடலூர், ஜூலை 24: அத்தி வரதரை மீண்டும் நீருக்கடியில் வைக்கக்கூடாது என்ற வில்லிப்புத்தூர் ஜீயரின் கருத்துக்கு பல்வேறு வைணவ அமைப்புகளும், பெருமாள் பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.வில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர் அத்திவரதர் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.கடந்த காலங்களில் சிலை திருட்டு பயந்து அத்திவரதர் உற்சவரை நீருக்கடியில் வைத்தனர். 40 ஆண்டுகள் கழித்து வெளியே வந்த அத்திவரதரை தற்போது மீண்டும் அவ்வாறு வைக்க தேவையில்லை. இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் என் தலைமையில் கோரிக்கை வைக்க இருக்கிறோம். அத்திவரதர் மேலே வந்ததால்தான் மழை பொழிகிறது. இவ்வாறு ஜீயர் அத்திவரதர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.ஜீயரின் கருத்து ஏற்புடையதல்ல என கடலூரை சேர்ந்த வைணவ பேச்சாளர் வளவ துரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழர்கள் தொன்று தொட்டு பின்பற்றிவரும் பக்தி ஆன்மிகத்தில் மரபுகளை மாற்றக்கூடாது. திருப்பாவையில் குறிப்பிட்டுள்ளவாறு, மேலையார் செய்வனகள் என்று சொல்லியிருப்பது முன்னோர்கள் சொல்லிய மரபினை தொடர்ந்து பின்பற்றுதல் ஆகும். மேலும் செய்யாதன செய்யோம் என்பதும் முன்னோர்கள் செய்வதற்கு மாறாக எதையும் செய்ய மாட்டோம் என்பதாகும்.ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒவ்வொரு மரபு உண்டு. அத்திவரதரை பொறுத்தமட்டில் 40 ஆண்டுகள் திருக்குளத்தில் உள்ளே வைக்கப்பட்டு பிறகு எடுத்து சேவிக்கப்பட்டு வருகிறார். தொன்று தொட்டு நடந்து வரும் இந்த மரபினை மாற்றுவது பக்தர்கள் மற்றும் மக்களின் மனதை புண்படுத்திவிடும். எனவே,  வில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்த கருத்துகள் வைணவ பக்தர்களுக்கு ஏற்புடையதல்ல.  வழக்கம் போல அத்திவரதரை மீண்டும் நீருக்கடியில் வைப்பதே சிறந்த பக்தி முறையாகும் என்றார். மேலும் பல்வேறு வைணவ அமைப்புகளும் ஜீயரின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: