உரிய ஏற்பாடுகள் செய்யாததால் கடலூரில் தேர்வு எழுத முடியாமல் கல்லூரி மாணவர்கள் தவிப்பு

கடலூர், மே 4: கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையமாக செயல்படுகிறது. இதைத் தொடர்ந்து கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப் பெட்டிகள் தேவனாம்பட்டினம் கலைக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சம்பந்தப்பட்ட கல்லூரிக்கான பல்கலைக்கழக தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் தமிழ் பாடத்திற்கான தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சுமார் 2000 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவர்களுக்காக கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பிற்பகல் 1 மணி முதல் தேர்வு என அறிவிக்கப்பட்ட நிலையில் கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத அவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட திருப்பாதிரிப்புலியூர் பெண்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். ஆனால் 2000 மாணவர்களுக்கும் சம்பந்தப்பட்ட பள்ளியில் ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்படாததால் 500க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவித்தனர். இதுகுறித்த புகாரைத் தொடர்ந்து பல்கலைக்கழக தேர்வு மையம் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி தரப்பினர் ஏற்பாடுகளை மேற்கொண்டனர். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் நின்றிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக பின்னர் ஒரு மணி நேரம் காலதாமதத்திற்கு பின் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அதன்படி காலதாமதமாக தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் தேர்வு எழுதி முடித்துவிட்டு சென்றனர். இதனால் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post உரிய ஏற்பாடுகள் செய்யாததால் கடலூரில் தேர்வு எழுத முடியாமல் கல்லூரி மாணவர்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: