தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு அமைக்கும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

புவனகிரி, ஏப். 30: புதுச்சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சத்திரம் அருகே உள்ளது சிலம்பிமங்கலம் கிராமம். சிதம்பரம் – கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த கிராமத்தின் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. சிலம்பிமங்கலத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுச்சத்திரத்தில் ஒரு மேம்பாலமும், அதுபோல் மற்றொரு திசையில் பெரியப்பட்டு கிராமத்தில் ஒரு மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 மேம்பாலங்களுக்கும் இடையே சிலம்பிமங்கலத்தில் இருந்து உள் கிராமங்களாக உள்ள சின்னாண்டிகுழி, சாமியார்பேட்டை உள்ளிட்ட இடங்களுக்கு சாலை செல்வதற்கு வழி விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழியை அடைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் நேற்று மாலை சிலம்பிமங்கலம் கிராமத்திற்கு வந்தனர். அப்போது அங்கு திரண்ட கிராம மக்கள் சுமார் 100க்கு மேற்பட்டோர் இந்த பணிகளை திடீரென தடுத்து நிறுத்தினர். இந்த சாலையில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டால் சிலம்பிமங்கலம் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம், இடுகாடு போன்ற பகுதிகளுக்கும், அருகில் உள்ள சின்னாண்டிக்குழி, சாமியார்பேட்டை போன்ற கிராமங்களுக்கும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்சென்று, அதன் பிறகு மற்ற இடத்திற்கு செல்ல வேண்டும் என கூறினர்.

இதுபற்றி தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் வருவாய்த்துறை அலுவலர்களும் அங்கு வந்தனர். இதையடுத்து சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி, இன்ஸ்பெக்டர்கள் புதுச்சத்திரம் சுஜாதா, பரங்கிப்பேட்டை ஜெர்மின்லதா உள்ளிட்டோர் அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏஎஸ்பி ரகுபதி சாலை பணிகளை தடுக்கக் கூடாது. அதையும் மீறி தடுத்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என கூறினார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ஏஎஸ்பியிடம் தாறுமாறாக பேசினார். இதையடுத்து அவரை கைது செய்யுமாறு போலீசாருக்கு ஏஎஸ்பி உத்தரவிட்டார்.

இதையடுத்து அவரை போலீசார் ஜீப்பில் ஏற்றினர். அதற்கு அங்கு கூடியிருந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவரை கைது செய்தால் எங்களையும் கைது செய்யுங்கள் என குரல் எழுப்பினர். இதையடுத்து போலீசார் அவரை விடுவித்தனர். பணிகளை தொடர்ந்து செய்வதற்கு அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி சுமார் 50க்கும் மேற்பட்டோர் சிலம்பிமங்கலம் கிராமத்தில் காத்திருந்ததால் நெடுஞ்சாலையில் தடுப்புக் கடைகள் அமைக்கும் பணி நடைபெறவில்லை. இதனால் கிராமத்தில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

The post தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு அமைக்கும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: