புதுவை முழுவதும் 2வது நாளாக 150 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை 39 பேரை பிடித்து விசாரணை

புதுச்சேரி, ஏப். 27: புதுச்சேரி முழுவதும் 2வது நாளாக நேற்று 150 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, விசாரணைக்காக 39 ரவுடிகளை போலீசார் பிடித்து சென்றனர்.
புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை குறைப்பதற்கும் மற்றும் ரவுடிகளை ஒழிப்பதற்கும் காவல்துறையில் `ஆபரேஷன் திரிசூலம்’ என்ற திட்டம் 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், அவர்கள் வீட்டில் ஆயுதங்கள் அல்லது வெடி பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைத்துள்ளார்களா? என்பதை ஆராய்வதற்கும் நேற்று முன்தினம் போலீசார் ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, 2வது நாளாக நேற்று அதிகாலை வடக்கு எஸ்.பி. வீரவல்லபன் தலைமையில் லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, சப்-இன்ஸ்பெக்டர் பாஷா, போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் லாஸ்பேட்டை காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட கருவடிக்குப்பம், மடுவுபேட், சாமிப்பிள்ைள தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ரவுடிகளின் வீடுகளில் கஞ்சா, ஆயுதங்கள், வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை செய்தனர். மேலும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள், ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்தனர். இந்த சோதனை சுமார் 2 மணி நேரம் நடந்தது.

புதுச்சேரி கிழக்கு எஸ்.பி. லட்சுமி சவுஜன்ய தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கிட்லா சத்யநாராயணன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை உருளையன்பேட்டை, ஒதியஞ்சாலை காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பெரியார் நகர், ஆட்டுபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதேபோல், முதலியார்பேட்டை மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் 2வது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 150 குற்றப்பின்னணி உடைய நபர்களை அவர்களது வீட்டில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் 39 நபர்களை விசாரிப்பதற்காக பிடித்தனர். 2 நபர்கள் மீது ஆயுதம் வைத்திருந்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஒரு நபர் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 1 நபர் மீது பிடியாணை நிறைவேற்றப்பட்டது. 31 நபர்கள் மீது முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ரவுடிகளின் மீது குண்டர் சட்டம் சீனியர் எஸ்.பி. தகவல்
இதுகுறித்து சட்டம்-ஒழுங்கு சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா கூறுகையில், எஸ்பிக்கள், ரவுடிகள் தடுப்பு படை அதிகாரிகள் மற்றும் போலீசார் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையானது, புதுச்சேரியை போதை பொருட்கள் மற்றும் ரவுடிகள் இல்லாத பிரதேசமாக மாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும். மேலும், காவல்துறை தலைமையகத்தின் அறிவுறுத்தலின்படி இனிவரும் காலங்களில் குண்டர் சட்டம் மற்றும் போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் அதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும். என்றார்.

The post புதுவை முழுவதும் 2வது நாளாக 150 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை 39 பேரை பிடித்து விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: