கடவூர் அருகே சேவாப்பூரில் 6 மாதமாக மந்த கதியில் நடந்து வரும் பாலம் அமைப்பு பணி

கடவூர், ஜூலை 23: கடவூர் சேவாப்பூரில் காட்டாற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தை கட்டி முடித்து எப்போது திறப்பார்கள் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வியாபார ரீதியாக திண்டுக்கல் செல்ல வேண்டுமென்றால் சேவாப்பூர் காட்டாற்று பாலத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும். மழை காலங்களில் இந்த பாலத்தை இப்பகுதி மக்கள் பயன்படுத்த முடியாது. இந்த சறுக்குப்பாலம் வழியாக டூவீலரில் செல்பவர்கள் மற்றும் கனரக வாகனங்கள் விபத்துள்ளாகின்றன. இதனால் மழை காலம் வந்துவிட்டால் இப்பகுதி மக்கள் வையம்பட்டி சென்று தான் திண்டுக்கல் செல்ல வேண்டும். இதனால் இவர்களுக்கு 20 கி.மீ. கூடுதலாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.இதனை கருத்தில் கொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரூரில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா சேவாப்பூரில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்று சுமார் ரூ.80 லட்சம் வரை நிதி ஒதுக்கி பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பாலம் அமைக்கும் பணி தொடங்கி 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பணிகள் இன்னும் மந்தநிலையாக செயல்படுகிறது. மழை காலம் தொடங்கப் போகிறது.பாலப்பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: