அரசியல் பிரமுகர் வீட்டில் தங்க முடிவு மகளின் திருமணத்துக்காக பரோலில் வரும் நளினி வேலூரில் தங்குகிறார் போலீசார் தகவல்

வேலூர், ஜூலை 18:மகள் திருமணத்திற்காக ஒரு மாத பரோலில் வரும் நளினி வேலூர் சத்துவாச்சாரியில் அரசியல் பிரமுகர் ஒருவரின் வீட்டில் தங்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். மகள் திருமண ஏற்பாடுகளுக்கு 6 மாதம் பரோல் கேட்டு நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு கடந்த 5ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நளினிக்கு ஒரு மாத பரோல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 13ம் தேதி நளினி பரோல் தொடர்பாக நளினியின் தாய் பத்மா, காட்பாடியில் உள்ள குடும்ப நண்பர் ஆகிய 2 பேர் உறுதிமொழி ஆவணங்களையும், தங்கும் இடம் குறித்து வழக்கறிஞர் புகழேந்தி, சிறை நிர்வாகத்திடமும் சமர்ப்பித்தனர்.
Advertising
Advertising

இதுகுறித்து சிறை நன்னடத்தை அதிகாரிகள், காவல் துறையினர் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதியிடம் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையை சரிபார்த்து சிறைத்துறை ஏடிஜிபி அலுவலகத்திற்கு சிறைத்துறை டிஐஜி அனுப்பி உள்ளார். இதையடுத்து நளினி நாளை அல்லது நாளை மறுநாள் பரோலில் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஒரு மாத பரோலில் வரும் நளினி சத்துவாச்சாரியில் உள்ள அரசியல் பிரமுகர் வீட்டில் தங்க உள்ளார். அங்கு அவரின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அதன் அறிக்கை ஏடிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நளினியை பரோலில் விடுவிப்பது தொடர்பான உத்தரவு வெளியாகும். அந்த உத்தரவை தொடர்ந்து நாளை அல்லது நாளை மறுநாள் சிறையில் இருந்து பரோலில் வெளியே செல்ல உள்ளார்’ என்றனர்.

Related Stories: