அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில் ரூ.200 கோடிக்கு வர்த்தகம்

 கோவை,ஜூலை 16: கோவை கொடிசியா வளாகத்தில் நடந்த அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில் ரூ.200 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக கொடிசியா தலைவர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியா வளாகத்தில் ‘அக்ரி இன்டெக்ஸ்’ விவசாய கண்காட்சி கடந்த 12ம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. 19வது ஆண்டாக நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் 460 அரங்கு அமைக்கப்பட்டிந்தன. உழவுக்கருவிகள், ஆர்கானிக் உரங்கள், வேளாண் உபகரணங்கள், தண்ணீர் இறைக்கும் பம்புகள், நவீன சொட்டு நீர் பாசனக்கருவிகள் என கண்காட்சியில் உழவு முதல் அறுவடை இயந்திரங்கள் வரை அனைத்து விவசாயத்துக்கும் உதவும் வகையில் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டிந்தன. இந்த நிலையில், கடந்தாண்டை காட்டிலும் அதிக மக்கள் வந்து கண்காட்சியை பார்த்ததாகவும், ரூ.200 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றதாகவும் கொடிசியா தலைவர் ராமமூர்த்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘சிறு, குறு விவசாயிகள் நலனையும் கருத்தில் கொண்டு இந்தாண்டு அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த கண்காட்சிக்கு பாண்டிச்சேரி கேரளா மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைச்சர்களும் தங்களது குழுவினரோடு வந்து பார்வையிட்டனர். வடமாநிலத்தை சேர்ந்த அரசுத்துறையினரும்,விஞ்ஞானிகளும் அவர்களது மாநிலத்தில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகளை அறிந்து கொள்ள வந்திருந்தனர். மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். ரூ.200 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றது.’’ என்றார்.
Advertising
Advertising

Related Stories: