வைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

வைகுண்டம், ஜூலை 16: வைகுண்டம் குருசுகோயில் புனித சந்தியாகப்பர் திருத்தல திருவிழா இன்று(16ம்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித சந்தியாகப்பருக்கு 1938ம் ஆண்டு வைகுண்டம் தாமிரபரணி நதிக்கரையில் ஆலயம் எழுப்பப்பட்டது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 16ம் தேதி முதல் 25ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு திருவிழாவின் தொடக்கமாக இன்று (16ம் தேதி) காலை 7 மணிக்கு வைகுண்டம் குருசுகோயில் ஊர் பொதுமக்கள் - மீனவ மக்களுக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது.

மாலை 4 மணிக்கு புனித சந்தியாகப்பர் சொரூபம் வண்ண விளக்குகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு குருசுகோயில் முன்பிருந்து நகரின் முக்கிய பகுதிகளுக்கு வேனில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஊர் பங்குமக்கள் கொடிகள் ஏந்தி புனித சந்தியாகப்பரை போற்றி பாடல்கள் பாடியவாறே முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக இசை வாத்தியங்கள், வாண வேடிக்கைகள் முழங்க கோயிலை வந்தடைகின்றனர்.

மாலை 6.30 மணிக்கு ஆலயம் முன்புள்ள கொடி மரத்தில் சிறப்பு கொடிகளை அர்ச்சித்து பங்குதந்தை லெரின் டி ரோஸ் கொடியேற்றி வைக்கிறார். இரவு 7 மணிக்கு வைகுண்டம் பங்குத்தந்தை மரியவளன் தலைமையில் மறையுரையும், நற்கருணை ஆராதனையும் நடக்கிறது.

கொடியேற்றத்தை தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கும், 6.30 மணிக்கும் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆராதனையும் நடைபெறும். 21ம் தேதி 6ம் திருவிழாவன்று மதியம் 1 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடக்கிறது. முக்கிய திருவிழாவான 10ம் திருவிழா வருகிற 25ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை 4.30 மணி, 5.10 மணி, 5.50 மணி, 7 மணி மற்றும் 10 மணிக்கு 5 திருப்பலிகள் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடக்கிறது.

தொடர்ந்து காலை 10 மணிக்கு ஆலய திருத்தேரில் மாதாவும், சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும் வீதியுலா வருகின்றனர். புனித சந்தியாகப்பர், மாதா வீதி உலாவின்போது பக்தர்கள் உப்பு, மிளகு, மலர் தூவி வணங்குவது கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த வழிபாட்டில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. மாலை 6 மணிக்கு சிறப்பு ஆராதனை நடக்கிறது. 26ம் தேதி காலை கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை வைகுண்டம் குருசுகோயில் ஆலய பங்குத்தந்தை மரியவளன் மற்றும் அருட்சகோதரிகள், ஊர்நல கமிட்டியினர், பங்குமக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: