தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பிளம்பர் குடும்பத்தினர்

தூத்துக்குடி, ஜூலை 16: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பிளம்பர் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் மடக்கி கேனை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ரூ.7 லட்சத்தை விளாத்திகுளம் பேரூராட்சி அதிகாரிகள் சுருட்டிக் கொண்டதாக பரபரப்பு புகார் தெரிவித்தார்.    தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஆஸ்பத்திரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் மந்திரமுத்து. பிளம்பரான இவர், தனது மனைவி சோலையம்மாள், மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் நேற்று கலெக்டர்  அலுவலகத்திற்கு வந்தார். அவரது கையில் மண்ணெண்ணெய் கேனும் இருந்தது. கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விரைந்து சென்று மந்திரமுத்துவிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் விசாரணையின்போது மந்திரமுத்து தெரிவித்ததாக போலீசார் கூறியதாவது:

மந்திரமுத்து, விளாத்திகுளம் பேரூராட்சியில் பிளம்பிங் பணிகளை ஒப்பந்த முறையில் எடுத்து செய்து வந்துள்ளார். அவர் பசுமை வீடுகள் மற்றும் புதிய குடிநீர் இணைப்பிற்காக பொதுமக்களிடம் வசூல் செய்து கொடுத்த ரூ.7.30 லட்சம் பணத்தை பேரூராட்சி அதிகாரிகள் மோசடி செய்து விட்டனராம். அந்த பணத்தை சுருட்டிக் கொண்ட அதிகாரிகள் பசுமை வீடுகள் கட்டித் தரவோ, புதிய குடிநீர் இணைப்புகளை வழங்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை.  இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிலும் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே மந்திரமுத்துவிடம் பணம் கொடுத்த பொதுமக்கள் பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுக்கவே, மன உளைச்சலால் மந்திரமுத்துவுக்கு இதயநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர், குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுமென காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதுகுறித்து கலெக்டரிடமும் மந்திரமுத்து மனு அளித்தார். அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Related Stories: