வேலூர் மாவட்டத்தில் நேரம் தவறி இயங்கும் அரசு பஸ்களால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை

வேலூர், ஜூலை 12: வேலூர் மாவட்டத்தில் நேரம் தவறி இயங்கும் அரசு பஸ்களால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. வேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவில் மாணவர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கிராமங்களில் இருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு பஸ்கள் இயக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல், காட்பாடி- பாகாயம் வழித்தடத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்லும் நேரத்தில் பஸ்கள் குறைந்தளவில் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல தனியார் பஸ்களில் மாணவர்கள் பயணிக்கின்றனர். எனவே, அரசு பஸ்களை சரியான நேரத்தில் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Advertising
Advertising

இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது: அரசு பஸ்கள் காலை, மாலை நேரங்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு இயக்கப்படுவதில்லை. இதனால், இலவச பஸ் பாஸ் இருந்தும் பெரும்பாலான மாணவர்கள் தனியார் பஸ்களில் செல்கின்றனர். மேலும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தங்களில் சில அரசு பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை. இதனால், பஸ்களுக்கு பின்னால் ஓடிச் சென்று மாணவர்கள் ஆபத்தான நிலையில் ஏறுகின்றனர். கிராமப்பகுதிகளில் இருந்து குறைந்தளவில் பஸ்கள் இயக்கப்படுவதால், படியில் தொங்கியபடி பலர் பயணிக்கின்றனர். மேலும் ஆங்காங்கே பஸ்கள் பழுதாகி நடுவழியில் நின்றுவிடுகிறது. பஸ்களை சரிவர பராமரிக்காமல் இருப்பதே இதற்கு காரணம். இவைகளை கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

அரசு பஸ்களுக்கான நேர கண்காணிப்பாளர்கள் சரியான நேரத்தில் பஸ்கள் இயக்கப்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் டிக்கெட் பரிசோதகர்கள் பெயரளவிற்கு எப்போதாவது ஒருமுறை மட்டுமே பஸ்நிறுத்தங்களில் சோதனை நடத்துகின்றனர். டிக்கெட் பரிசோதகர்கள் தொடர்ந்து பணியில் இருந்தால், பஸ்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வருகிறதா? என்பது குறித்து கண்காணிக்க முடியும்.மேலும் பஸ்களில் எந்தெந்த நேரத்தில் எந்தெந்த இடத்தில் நிற்கும், எந்த வழித்தடத்தில் இயங்கும் என்பதற்கான அட்டவணை மற்றும் வரைபடங்களை பஸ்களில் வைக்க வேண்டும். அதோடு, மாநகராட்சி பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் பஸ்கள் வந்து செல்லும் நேரத்துக்கான அட்டவணையை வைக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளால் பஸ்களை சரியான நேரத்துக்கு இயக்குவதை உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: