வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே பகுதியில் டாஸ்மாக் பார்களில் குடிமகன்களுக்காக அமைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றம்: வட்டாட்சியர் அதிரடி நடவடிக்கை

வாலாஜாபாத், ஜூன் 13: தினகரன் செய்தி எதிரோலியாக, வாலாஜாபாத்தில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என டாஸ்மாக் நிறுவாகத்துக்கு, வட்டாட்சியர் பரிந்துரை செய்துள்ளார். வாலாஜாபாத் - பெரும்புதூர் சாலையில் தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கோயில்கள் உள்ளன. இங்கு, தாலுகா அலுவலகத்தை ஒட்டி எதிர்எதிரே 2 டாஸ்மாக் கடைகள்  செயல்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்ற செய்தி கடந்த 10ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இந்நிலையில், வாலாஜாபாத் வட்டாட்சியர் கோடீஸ்வரன், மண்டல துணை வட்டாட்சியர் மனோகரன் உள்பட பேரூராட்சி ஊழியர்கள், நேற்று மேற்கண்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர், வாலாஜாபாத் சந்தைமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் குடிமகன்களுக்காக  அமைக்கப்பட்ட தடுப்புகளை அதிரடியாக அகற்றினர்.

மேலும், பச்சையம்மன் கோயில் அருகே அனுமதி பெறாத பார் தடுப்புகளையும் அகற்றினர். தொடர்ந்து, வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையையும் இங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றி அமைக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.  வாலாஜாபாத் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் செயல்பட்டு வந்த அனுமதி பெறாத பார்களில் தடுப்புகளை அகற்றப்பட்ட சம்பவத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையொட்டி, தினகரன் நாளிதழுக்கு தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர்.

Related Stories: