தாடை வழியாக சென்ற குண்டு நெற்றி வழியாக வந்தது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி: சேப்பாக்கத்தில் பரபரப்பு

சென்னை: பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி செய்த சம்பவம் சேப்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் ஜரூர் தாலுகா மந்திக்குளம் கிராமத்தை சேர்ந்த பொன்னுச்சாமியின் மகன் வேலுச்சாமி (24). காவலராக பணிபுரியும் இவர், தற்போது சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் உள்ள பழைய அரசு விருந்தினர் மாளிகையில் கடந்த 5 நாட்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக சட்டப் பேரவை நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் 100க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேலுச்சாமி நேற்றிரவு 6மணி முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த டைனிங் ஹாலுக்கு சென்று அமர்ந்திருந்தார். அப்போது, பாதுகாப்பு பணிக்காக 303 ரக துப்பாக்கி ஒன்றை கையில் வைத்திருந்தார். அப்போது, திடீரென அந்த துப்பாக்கியை தனது தொண்டை குழிக்கு நேராக வைத்து சுட்டார். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்த வேகத்தில் தாடையை துழைத்துக் கொண்டு அவரது நெற்றிக்கு நேராக வெளியில் வந்தது. இதில், அவரது தலையிலிருந்து அதிக ரத்தம் வெளியாகியதால் அந்த இடம் முழுவதும் ரத்தம் சிதறி கிடந்தது.துப்பாக்கி வெடிக்கும் சத்தத்தை கேட்டு அங்கிருந்த மற்ற போலீசார் டைனிங் ஹாலுக்கு ஓடி வந்தனர். வேலுச்சாமி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த தகவலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். உடனடியாக கூடுதல் கமிஷனர் கண்ணன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். உடனடியாக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சென்ற அவர் வேலுச்சாமியின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். நெற்றி வழியாக குண்டு வெளியில் வந்தாலும், அவரது மூளைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் வேலுச்சாமியை காப்பாற்றும் முயற்சியில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், வேலுச்சாமி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. எதற்காக அவர் தற்கொலை செய்ய முயற்சித்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post தாடை வழியாக சென்ற குண்டு நெற்றி வழியாக வந்தது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி: சேப்பாக்கத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: