தொகுப்பு வீடு கட்டித்தர கோரிக்கை

உடுமலை, மே 15:  உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மீன் பிடிக்கும் உரிமம் ஒப்பந்த அடிப்படையில் அங்குள்ள 17 மீனவ குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேட்டூர், தர்மபுரி பகுதியை சேர்ந்த இவர்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமராவதி அணை பகுதியில் தங்கி மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர்.

ஆனால் இவர்கள் குடியிருக்க வீடு இல்லை. மீன் பண்ணை வளாகத்தில் குடிசை போட்டு வசிக்கின்றனர். போதிய வசதிகள் இல்லாததால் வெயில் காலங்களிலும், மழைக்காலங்களிலும் அவதிப்படுகின்றனர். சிலர் வீடுகளில் பழைய பழுதடைந்த பரிசல்களையே கூரையாக பயன்படுத்துகின்றனர். மேலும் அரசு தொகுப்பு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என பல ஆண்டாக அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் வரும்போது மீனவர்கள் இதுபற்றி முறையிடுகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைவில் வீடு கட்டித்தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: