துபாய் செல்வதாக கூறிவிட்டு வந்த வாலிபர் திடீர் மாயம் : விமான நிலைய போலீஸ் விசாரணை

சென்னை, மே 8: கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் ரகுராம். துபாயில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் இளம்பரிதி (19). கடந்த ஆண்டு சென்னையில் பிளஸ் 2 படித்தார். தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. இதனால், மறுதேர்வு எழுதுவதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன் சென்னை வந்தார். பின்னர், சென்னை விமான நிலைய  குடியிருப்பில் வசிக்கும் சரோஜா (58) என்பவரது வீட்டில் தங்கி, மறுதேர்வு எழுதினார். தேர்வு முடிந்ததும் துபாய்க்கு செல்லாமல் சென்னையிலேயே தங்கிவிட்டார். இதனால், அவரது பெற்றோர் இளம்பரிதியை செல்போனில் தொடர்புகொண்டு, துபாய் வருமாறு அழைத்தனர். ஆனால், ‘‘இன்று வருகிறேன், நாளை வருகிறேன்’’ எனக்கூறி தட்டிக்கழித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ரகுராம் தனது மகனை கண்டித்ததால் துபாய் வருவதாக ஒப்புக்கொண்டார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இளம்பரிதி, துபாய் செல்வதாக கூறிவிட்டு தனது உடமைகளை எடுத்துக்கொண்டு விமான நிலையம் புறப்பட்டார். ஆனால் நேற்று மதியம் வரை அவர் துபாய்க்கு செல்லவில்லை. இதையடுத்து ரகுராம் மகனை செல்போனில் தொடர்புகொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பின்னர், சரோஜாவை தொடர்பு கொண்டபோது, அவர் துபாய் புறப்பட்டு விட்டதாக கூறினார். இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில்,  கடந்த ஞாயிறு முதல் நேற்று வரை துபாய் சென்ற எந்த விமானத்திலும் இளம்பரிதியின் பெயர் இல்லை. உண்மையிலேயே அவர் விமான நிலையத்துக்கு வந்தாரா? வேறு எங்காவது சென்றாரா? என விசாரித்து வருகின்றனர்.

Related Stories: