போக்குவரத்துக்கு லாயக்கற்ற கீழவைப்பார்-சிப்பிகுளம் சாலை சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

குளத்தூர்,ஏப்.25: போக்குவரத்துக்கு லாயக்கற்று உள்ள கீழவைப்பார்-சிப்பிகுளம் சாலையை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். குளத்தூரையடுத்த பனையூர் கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து கீழவைப்பார், சிப்பிகுளம் வழியாக சென்று வைப்பார் கிழக்கு கடற்கரை சாலையில் இணைகிறது. இச்சாலையை ஒட்டியுள்ள குண்டபெருமாள்புரம், கல்லூரணி, அகமதுபுரம் பகுதி கிராம மக்கள் மீன்பிடி தொழில், உப்பளத்தொழில், மற்றும் விவசாய பணிகளுக்கு செல்ல இச்சாலையை அதிகமாக பயன்படுத்திவருகின்றனர். மேலும் திருச்செந்தூர், ராமேஸ்வரம் செல்லும் முக்கிய சாலையாகவும் உள்ளது. இச்சாலை போடப்பட்டு பலவருடங்களாக பராமரிப்பு பணிகள் ஏதும் சரிவர செய்யாமல் சாலை முழுவதும் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது.

மேலும் இப்பகுதி சாலையோரம் உப்பளங்கள் நிறைந்த பகுதியாகும். இதனால் அதிகாலை முதலே உப்பளத்திற்கு டூவீலர் மற்றும் சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். குண்டும் குழியுமான இச்சாலையில் செல்வதால் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் பழுதாகி விபத்துகள் ஏற்படும் சூழ்நிலைக்குள்ளாகின்றனர். மேலும் கீழவைப்பார், சிப்பிகுளத்தில் மீன்கள் ஏலக்கூடம் உள்ளதால் மீன்களை ஏலத்தில் எடுக்க வெளியூர் வியாபாரிகள் லோடு வேன்களில் இச்சாலை வழியாக செல்வதற்குள் போதும் போதும் என ஆகிவிடுகிறது.

சாலையை முழுமையாக சீரமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் இப்பகுதி பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்த போதிலும் ஏதோ கண்துடைப்புக்கு சாலையில் ஒட்டு போடுவதும், பின்னர் அடுத்த நிமிடமே அது சிதிலமடைவதும் தொடர்கதையாக உள்ளது. எனவே, இப்பகுதி பொதுமக்களின் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சிதிலமடைந்த இச்சாலையை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: