சூறைக்காற்றுடன் பெய்த மழையால் காஞ்சிபுரம் நகரில் தொடர் மின்தடை

காஞ்சிபுரம், ஏப்.24: காஞ்சிபுரம் நகர் முழுவதும், நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் பெய்த மழையால், மின்கம்பங்கள் விழுந்து மின்தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தாலும், பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்தன. இதனால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

கொளுத்தும் கோடையில் திடீர் மழை பெய்ததால், காஞ்சிபுரத்தில் ரங்கசாமிகுளம், காந்திரோடு, இரட்டை மண்டபம், மூங்கில் மண்டபம், கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை, கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு உள்பட பல பகுதிகளில் சாலைகளில் பெருக்கெடுத்து மழைநீர் ஆறாக ஓடியது. மேலும் பலத்த காற்று வீசியதால் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன.

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் இருந்த புளியமரம் வேரோடு பயணிகள் நிழற்குடை மீது சாய்ந்தது. இதனால், நகரின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காஞ்சிபுரம் பஸ் நிலையம், காமாட்சி அம்மன் கோயில் பகுதி உள்பட பல இடங்களுக்கு இரவு 9 மணி முதல் மின்விநியோகம் செய்யப்பட்டது.காந்தி சாலை, ரங்கசாமிகுளம், சின்ன காஞ்சிபுரம் உள்பட சில பகுதிகளுக்கு நேற்று அதிகாலையில் மின்விநியோகம் சரிசெய்யப்பட்டது. ஆனாலும் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்பட பல பகுதிகளில் மாலை 4 மணிவரை மின்சாரம் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியடைந்தனர்.மற்ற பகுதிகளிலும் அடிக்கடி மின் தடை செய்ததால், காஞ்சிபுரத்தில் பொது மக்கள் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் அவதிப்பட்டனர்.

Related Stories: