காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் வருகைக்காக மூடிய சிலைகளை திறந்து வைத்து ஆளுங்கட்சியினர் அட்டகாசம்: தேர்தல் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்

உத்திரமேரூர், மார்ச் 20: உத்திரமேரூர் பகுதிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், கூட்டணி மற்றும் அதிமுகவினரை சந்தித்து ஆதரவு திரட்ட வந்தபோது, அப்பகுதியில் மூடப்பட்டு  இருந்த தலைவர்களின் சிலைகளை திறந்து அதிமுகவினர் அடாவடியில் ஈடுபட்டனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இதைதொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால், அரசியல் கட்சிகளின் சுவர்  விளம்பரங்கள், கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன. தலைவர்கள் சிலைகள் பேப்பர் மற்றும் துணிகளால் மறைக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக மரகதம் குமரவேல் அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, அவர் பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.  இதைதொடர்ந்து, கூட்டணி கட்சியினரை சந்திக்க அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், உத்திரமேரூர் மற்றும் சாலவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு சென்றார்.

அதிமுக வேட்பாளர் வருகைக்காக, அப்பகுதியில் மூடப்பட்டு இருந்த எம்ஜிஆர், அண்ணா, அம்பேத்கர் ஆகிய சிலைகளை அதிமுகவினர் திறந்து வைத்தனர். பின்னர் மரகதம் குமரவேல் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை  அணிவித்தார். இதனால், உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே, தேர்தல் அலுவலர்களுக்கும், அதிமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.பின்னர், அதிகவினர் சென்ற பிறகு தேர்தல் அலுவலர்கள், தலைவர்களின் சிலைகளை மூடி மறைத்துவிட்டு சென்றனர். இதனால், தேர்தல் அலுவலர்கள், அதிமுகவினருக்கு சாதகமாக செயல்படுகின்றனரா என பொதுமக்கள் தரப்பில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Stories: