பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படாததால் வேதனை கலெக்டர் முன்னிலையில் பிச்சையெடுத்த விவசாயிகள்

தூத்துக்குடி, பிப். 22:  பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால் வேதனையடைந்த விவசாயிகள், தூத்துக்குடியில் நேற்று நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் முன்னிலையில் தட்டு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். தூத்துக்குடி சப்-கலெக்டர் சிம்ரான் ஜித் சிங் கலோன், திருச்செந்தூர் ஆர்டிஓ மணிராஜ், கோவில்பட்டி ஆர்டிஓ விஜயா, வேளாண் இணை இயக்குநர் மகாதேவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன்  முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியதும் பேசிய செக்காரக்குடியைச் சேர்ந்த விவசாயி காமராசு விடுத்த வேண்டுகோளை அடுத்து, காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து  கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசுகையில், ‘‘மாவட்டத்தில் 2016-17ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை 99% வழங்கப்பட்டுவிட்டது. மாவட்டத்துக்கு வரவேண்டிய ரூ.320.61 கோடியில், இதுவரை ரூ.314 கோடி வரபெற்று விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாரம் கூடுதலாக ரூ.4.46 கோடி வந்துள்ளது. இன்னும் ரூ. 2 கோடி மட்டுமே வரவேண்டியுள்ளது. அடுத்த கூட்டத்துக்கு முன்பு 100 சதவீதம் கொடுக்கப்பட்டுவிடும்.

 2017-18ம் ஆண்டு பயிர் காப்பீட்டு தொகையை பொருத்தவரை நெல் பயிருக்கு மட்டும் ரூ.1.64 கோடி வந்துள்ளது. மற்ற பயிர்களுக்கும் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படைப்புழு தாக்குதலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 40,508 விவசாயிகளுக்கு 54,894 ஹெக்டேர் அளவுக்கு மக்காசோளம் பயிர்கள் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். பாசிப்பயறு, உளுந்து ஆகியவை விவசாயிகளிடம் இருந்து மாவட்டத்தில் ஆண்டுதோறும் 10 இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது 3 இடங்களில் செயல்படுகிறது. அறுவடை நேரத்தில் மற்ற இடங்களிலும் செயல்படும். இதுவரை 23.60 டன் அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 2 ஹெக்டேருக்கு (5 ஏக்கர்) குறைவான நிலம் கொண்ட குறு, சிறு விவசாயிகளுக்கு ரூ. 6ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். அதன்படி ஆண்டுக்கு 3 தவணையாக தலா ரூ.2000 வழங்கப்படும்.

இத்திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 1,45,669 விவசாயிகள் இருப்பதாக ஏற்கனவே வேளாண்மை துறையில் உள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விஏஓக்கள், வேளாண் அலுவலர்கள், தோட்டக்கலை துறை அலுவலர்கள் 40 ஆயிரம் விவசாயிகளிடம் ஆய்வு நடத்தியுள்ளனர். இவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் இந்த உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். வருமான வரி செலுத்துகிறவர்கள், ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் ஓய்வூதியம் பெறுகிறவர்கள், அரசு அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. பட்டா யார் பெயரில் உள்ளதோ அவர்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். பட்டா பெயரில் உள்ளவர் இறந்தால் சட்டரீதியான வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும். அவர்களுக்குள் பிரச்னையோ நீதிமன்ற வழக்கு போன்றவை இருந்தால் நிதி கிடைக்காது’’ என்றார். கூட்டம் தொடங்கியதும் தமிழ் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாரியப்பன் ஆகியோர், விளாத்திகுளம், புதூர், கயத்தாறு பகுதிகளில் போதிய தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட மிளகாய் பயிர்களுடன் கலெக்டரிடம் முறையிட்டனர். மேலும் இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்குப் பதிலளித்த கலெக்டர் பயிர் காப்பீடு செய்திருந்தால் மகசூல் குறையும்பட்சத்தில் நிச்சயம் இழப்பீடு கிடைக்கும் என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த  சங்கரன் பேசுகையில், வறுமை கோடு பட்டியலை விஏஓ அலுவலகம், ஊராட்சி அலுவலகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றார். குரும்பூரைச் சேர்ந்த தமிழ்மணி பேசுகையில், ‘‘தாமிரபரணி ஆற்றில் மழைக்காலத்தில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க அணை கட்ட வேண்டும். மேலும், குரும்பூர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக அமைக்க வேண்டும்’’ என்றார். இதனிடையே மதிமுக விவசாய அணியைச் சேர்ந்த எரிமலை வரதன், கோவிந்தராஜ், ராஜாராம், பால்ராஜ், சுப்புராஜ், மகாராஜன், நக்கீரன், குமார், விநாயகமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு விவசாயிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர்காப்பீட்டு தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும்  போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கை தொடங்க உள்ளதால் இனிமேல் 3 மாதங்களுக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது. எனவே, விவசாயிகளுக்கான அனைத்து இழப்பீடு மற்றும் நிவாரண தொகைகளை உடனே வழங்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளாகிய நாங்கள் அனைவரும் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என வேதனையுடன் தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த கலெக்டர், பயிர் காப்பீட்டு தொகை விரைவாக கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணி காரணமாக நிவாரணம் வழங்குவதில் பாதிப்பு ஏற்படாது என உறுதியளித்தார். கலெக்டர் முன்னிலையில் நடைபெற்ற தட்டு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தால் சிறிதுநேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

Related Stories: