தூத்துக்குடியில் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் ஆய்வு

தூத்துக்குடி, பிப்.21: சீர்மரபினர் சமுதாயத்தினர் (டிஎன்சி) என்பதனை சீர்மரபினர் பழங்குடியினர் (டிஎன்டி) என மாற்றக்கோரிய மனுக்களை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வருவாய் நிர்வாக முதன்மைச் செயலர் அதுல்யா மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் கூட்டம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை இணை ஆணையர் லட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இயக்குநர் மதிவாணன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இயக்குநர் சம்பத், கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், குழுவின் தலைவர் அதுல்யா மிஸ்ரா பேசியதாவது: சீர்மரபினர் சமுதாயத்தினர் என்ற பெயரினை சீர்மரபினர் பழங்குடியினர் என மாற்றம் செய்து ஆணையிடுமாறு கோரிக்கைகள் வரப்பெற்றது. சீர்மரபினர் பட்டியலில் 68 ஜாதிகள் உள்ளன. இதுதொடர்பாக பல்வேறு அலுவலகங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டது.

Advertising
Advertising

மேலும், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் அரசு சீர்மரபினர் நல பள்ளிகள் மற்றும் விடுதிகளை பார்வையிட்டு சீர்மரபினர் சங்க நிர்வாகிகள் மற்றும் சீர்மரபினர் மக்களை சந்தித்து, கோரிக்கைகள் பெறப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குழுவினர் ஆய்வு செய்து சீர்மரபினர் மக்களை சந்தித்து, கோரிக்கைகள் பெறப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், சப்-கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், சப்-கலெக்டர் (பயிற்சி) அனு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், இணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) அருளரசு, மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் கண்ணன், சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் ஹரிகரன், ஸ்ரீரெங்கன், சோலைராஜா, ராஜன், மாநில மீனவர் அணி செயலாளர் (வலையர்) தங்கமுத்து மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories: