அனைத்து வேளாண் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, பிப். 15:   கோவில்பட்டி,  விளாத்திகுளம், கயத்தாறு, எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பல்வேறு  வட்டாரங்களில் இந்தாண்டு படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளம் பயிர்கள்  நாசமாகின. இதையடுத்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான  இழப்பீட்டுத் தொகையை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே காலதாமதமின்றி வழங்க வேண்டும். எட்டயபுரம்  தாலுகா படர்ந்தபுளி பிர்க்காவில் உள்ள 16 கிராம மக்களுக்கு மக்காச்சோளம்  பயிர் காப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும். 2017-18ம் ஆண்டுகளில் பயிர்  காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுக்கான தொகையை காலதாமதமின்றி  வழங்க வேண்டும்.  கடந்த 2015- 18ம் ஆண்டு வரை தேசியமயமாக்கப்பட்ட அனைத்து  வங்கிகளிலும் விவசாயிகள் பெற்ற அனைத்து வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநிலத்  தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமை வகித்தார். வடக்கு,  மேற்கு மாவட்டத் தலைவர்கள் நடராஜன், வெள்ளத்துரை  முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்ற விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை  மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றக்கோரி கோஷமிட்டனர்.

    இதில் கிழக்கு மாவட்டத் தலைவர் குருநாதன், செயலாளர் ஞானப்பிரகாசம், வடக்கு  மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், இளைஞர் அணிச் செயலாளர் மாரியப்பன், மாநில  துணைத்தலைவர் நம்பிராஜன், மாநில துணைச் செயலாளர் கனகராஜ், இளைஞர் அணி  மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட பொருளாளர் செல்வராஜ், மகளிர் அணி கஸ்தூரி,  கோவில்பட்டி வட்டாரத் தலைவர் தங்கராஜ், மகளிரணி ரேணுகாதேவி உள்ளிட்ட  பலர்  பங்கேற்றனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர்நாராயணசாமி கூறுகையில், ‘‘ தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் மானாவாரி பயிர்கள் பயிரிட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.7410 என அரசு அறிவித்த நிவாரணத்தொகை இன்னும் வந்து சேரவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக கோவில்பட்டி அருகே படர்ந்தபுளி பிர்க்காவில் மக்காச்சோள பயிருக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படவே இல்லை. தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.6 ஆயிரம் உதவித்தொகையை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். விவசாயிகளின் வாக்கு விவசாயிகளுக்குதான் என்ற அடிப்படையில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 2  தொகுதிகளில் போட்டியிடுவது. சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

Related Stories: