ஊட்டி, பிப். 13: நாளை ஊட்டி திமுக., தெற்கு ஒன்றியத்தின் சார்பில் நடக்கும் ஊராட்சி சபை கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கலந்துக் கொள்கிறார்.
நீலகிரி மாவட்ட திமுக., செயலாளர் முபராக் கூறியிருப்பதாவது: ‘திமுக., தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்ததின் படி, தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டம் நடக்கிறது. இதன்படி கடந்த 9ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டு அதற்கான தீர்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நாளை(14ம் தேதி) ஊட்டி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நஞ்சநாடு பஜார் பகுதியில் ஊராட்சி சபை கூட்டம் நடக்கிறது. இதில், திமுக., கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராசா கலந்து கொள்கிறார். இதைத்தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு இத்தலார் பஜார் பகுதியில் நடக்கும் ஊராட்சி சபை கூட்டத்திலும், மதியம் 1 மணிக்கு எமரால்டு பஜார் பகுதியில் நடக்கும் ஊராட்சி சபை கூட்டத்திலும் கலந்துக் கொள்கிறார்.